Link: https://www.einpresswire.com/article/890893495/u-s-tamil-diaspora-welcomes-swiss-led-talks-on-sri-lanka-calls-for-tamil-solution-based-on-history-and-law
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு: சுவிஸ் தூதரக முயற்சியை வரவேற்கிறோம் –
வரலாற்று உண்மையும் ஐ.நா. காலனித்துவ ஒழிப்பு சட்டமும் அடிப்படையாக இருக்க வேண்டும்
கொழும்பு / ஜெனீவா | ஊடக அறிக்கை
தமிழர்களுக்கான அரசியல் தீர்வை நோக்கி, சுவிட்ஸர்லாந்து தூதரகம் ஒருங்கிணைத்து வரும் முயற்சிகளை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம். குறிப்பாக, தமிழ்த் தேசியக் கட்சிகள் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகளுக்கிடையே ஒருமித்த நிலைப்பாட்டை உருவாக்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கலந்துரையாடல்கள், சர்வதேச சமூகம் இவ்விவகாரத்தில் காட்டும் பொறுப்புணர்வையும் கவனத்தையும் பிரதிபலிக்கின்றன.
அதேவேளை, எந்தவொரு அரசியல் தீர்வும் வரலாற்று உண்மைகளையும் சர்வதேச சட்ட அடிப்படைகளையும் புறக்கணித்து முன்வைக்கப்பட முடியாது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
ஈழம் – ஐரோப்பிய காலனித்துவத்திற்கு முன்பிருந்த ஒரு நாடு
ஐரோப்பிய காலனித்துவத்திற்கு முன்பு, இன்றைய இலங்கைத் தீவில் ஈழம் என்ற பெயருடன் தமிழர்கள் தங்களுக்கென அரசியல், நில, பண்பாட்டு அடையாளங்களுடன் வாழ்ந்தனர். அந்தக் காலத்தில் தமிழ் சைவம் மற்றும் தமிழ் புத்தமதம் இத்தீவின் இயல்பான மத மரபுகளாக இருந்தன.
இதற்கு மாறாக,
- “சிங்கள இன அடையாளம்”,
- “சிங்கள மொழி”,
- மேலும் மகாவம்சம் அடிப்படையிலான அரசியல்–மதக் கருத்தியல்
என அனைத்தும் பிற்காலத்தில் ஒரு குறிப்பிட்ட குழுவினரால் அரசியல் நோக்கில் கட்டமைக்கப்பட்டவை என்பதே வரலாற்று உண்மை. இன்றைக்கு “சிங்களவர்கள்” என அழைக்கப்படும் அடையாளமும், இந்தப் பிற்கால அரசியல் கட்டமைப்பின் விளைவாக உருவானதாகும்.
1960 ஐ.நா. காலனித்துவ ஒழிப்பு சட்டம் – தமிழர் இறையாட்சி
1960 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபை நிறைவேற்றிய காலனித்துவ ஒழிப்பு தீர்மானம் (UNGA Resolution 1514) தெளிவாகக் கூறுவது:
“ஒரு காலனித்துவ ஆட்சி முடிவுக்கு வரும்போது, அந்த நாடு, காலனித்துவம் தொடங்கிய போது இருந்த நிலைக்கு மீள வழங்கப்பட வேண்டும்.”
இந்த அடிப்படையில்,
- இலங்கை காலனித்துவம் செய்யப்பட்ட வேளையில் தமிழர்கள் தங்களுக்கென அரசியல் இறையாட்சியுடன் இருந்தனர்.
- ஆகவே, 1960 ஐ.நா. காலனித்துவ ஒழிப்பு சட்டத்தின் படி, தமிழர்களின் இறையாட்சி (Sovereignty) மீள வழங்கப்பட வேண்டும் என்பது சட்டபூர்வமான கோரிக்கையாகும்.
சர்வதேச முன்னுதாரணம்: மொரிஷியஸ் – டியாகோ கார்சியா
இந்தக் கொள்கைக்கு சர்வதேச முன்னுதாரணமும் உள்ளது. மொரிஷியஸ் நாடு டியாகோ கார்சியா தீவை இழந்திருந்த போதிலும், ஐ.நா. காலனித்துவ ஒழிப்பு கொள்கையின் அடிப்படையில், அந்தத் தீவு மீண்டும் மொரிஷியசுக்குத் திருப்பி வழங்கப்பட வேண்டும் என சர்வதேச நீதி அங்கீகரித்துள்ளது.
இது, தமிழர் ஈழ இறையாட்சி கோரிக்கையும் சர்வதேச சட்டத்திற்குள் முழுமையாக அமையும் என்பதை உறுதிப்படுத்துகிறது.
எமது நிலைப்பாடு
- சுவிட்ஸர்லாந்து தூதரகத்தின் மத்தியஸ்த முயற்சிகளை நாம் வரவேற்கிறோம்.
- ஆனால், “அரசியல் தீர்வு” என்பது 13A, Federalism, Unitary State ஆகிய கட்டமைப்புகளுக்குள் சுருக்கப்படக் கூடாது.
- அது வரலாற்று ஈழ இறையாட்சியையும், 1960 ஐ.நா. காலனித்துவ ஒழிப்பு சட்டத்தையும் அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும்.
தமிழர்களுக்கான நீடித்த, நீதியான தீர்வு
இறையாட்சி அடிப்படையிலான அரசியல் ஏற்பாட்டில்தான் சாத்தியம்.
“தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, கருணையால் அல்ல;
வரலாறாலும், சர்வதேச சட்டத்தாலும் உறுதிப்படுத்தப்பட்ட உரிமை.”