சஜித்தும் ரணிலும் இணங்கிச் செயற்படுவதால் தமிழர் தாயகம் பௌத்த பூமியாக்கப்படுகிறது! பனங்காட்டான்

நல்லாட்சி அரசில் ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்தபோது வீடமைப்பு அமைச்சராகவிருந்த சஜித் பிரேமதாச தமிழர் பிரதேசங்களில் ஆயிரம் பௌத்த விகாரைகள் அமைக்கப்படும் என்று கூறினார். இன்று எதிர்கட்சித் தலைவராகவுள்ள சஜித்தின் மனம் குளிர, ஜனாதிபதியாகவிருக்கும் ரணில் அதனை நிறைவு செய்கிறார். இவ்விடயத்தில் அவர்கள் பிணக்கின்றி இணங்கிச் செயற்படுகின்றனர். 

சுபகிருது ஆண்டு விடைபெற்றுச் செல்ல சோபகிருது என்ற பெயரில் இன்னொரு புத்தாண்டு பிறந்துள்ளது. இரண்டுமே இலங்கை அரசியல்போல அர்த்தம் புரியாத சொற்பதங்கள்.

தமிழர்கள் ஒரு வருடத்தில் எத்தனை புத்தாண்டு பிறப்பைக் கொண்டாடுகிறார்கள். ஜனவரி முதலாம் நாள் ஆங்கிலப் புத்தாண்டு. தைப்பொங்கல் தினத்தன்று தமிழ்ப் புத்தாண்டு. சித்திரை புத்தாண்டு தமிழ் – சிங்கள புத்தாண்டு எனச் சொல்லப்படுகிறது.

இந்தப் பெயர் விடயத்தில் மட்டும்தான் தமிழ் – சிங்கள இன ஒற்றுமை மதிக்கப்படுகிறது. இவ்வகையான பெருநாட்களில் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரான இரா.சம்பந்தன் எமது நினைவுகளில் தவறாது வந்து விடுவார். இதற்குக் காரணம், கடந்த பல வருடங்களாக தீபாவளிக்கு முன்னர், பொங்கலுக்கு முன்னர், புது வருடத்துக்கு முன்னர் தமிழர் பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துவிடுமென ஆரூடக்காரர்கள் போன்று அவர் விடுத்த செய்திகள்தான். இப்போது இந்தப் பெருநாட்களில் வாழ்த்துக் கூறுவதையே அவர் மறந்துவிட்டார்போல் தெரிகிறது. ஓரளவுக்கு அதுவும் நல்லதுதான்.

ரணில் விக்கிரமசிங்க முதல் முறையாக ஜனாதிபதி என்ற பதவி வழியாக சித்திரை புத்தாண்டு வாழ்த்துச் செய்தி வழங்கியுள்ளார். உலகளாவிய ரீதியில் கடன் பட்டாவது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த மக்களுக்கு இயன்றளவு நிவாரணமளித்துள்ளார் என்ற வகையில் வாழ்த்துக்கூற அவர் தகுதி பெற்றுவிட்டார் என்று கூறலாம்.

கடந்த பெப்ரவரி 4ம் திகதிக்கு முன்னர் தமிழர் பிரச்சனைக்குத் தீர்வு என்று ஜனாதிபதியாக பதவியேற்றபோது கூறிய ரணில் அதனை வசதி கருதி மறந்துவிட்டார். இப்போது தேசிய நல்லிணக்கம், உண்மைகளைக் கண்டறிதல், அதற்கான குழுக்களை நியமிப்பது என்ற பெயரில் காலத்தை இழுத்தடிக்கும் வியூகங்களை கச்சிதமாக வகுத்து வருகிறார்.

225 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட இலங்கையில், ஒற்றை அங்கத்தவரை மட்டுமே – அதுவும் தேசிய பட்டியல் ஊடாக வந்தவரை தமது ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் வைத்துக் கொண்டு, முழு நாடாளுமன்றத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் முதலாவது அரச அதிபர் ரணில்தான். தினமும் ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் இரண்டு விடயங்களை தெரியத்தருகின்றன. மகிந்த ராஜபக்ச தலைமையிலான பொதுஜன பெரமுனவின் ஆதரவோடு உருவான ஆட்சித்தரப்புக்கு பெரமுனவுக்குள் எதிரலை ஒன்று உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்ததாக, பிரதான எதிர்க்கட்சியான சஜித் பிரேமதாச அணியிலிருந்து பெருந்தொகையானவர்களை பதவி கொடுத்து கொள்முதல் செய்ய ரணில் தரப்பு இரவு பகலாக தீவிரமாக ஈடுபட்டு வரும் தகவல்கள்.

பொதுஜன பெரமுன ரணில்மீது அதிருப்தி கொண்டிருப்பதற்கான முக்கிய காரணம், இவர்கள் தரப்பிலிருந்து பரிந்துரை செய்யப்பட்ட பலருக்கும் இதுவரை அமைச்சர் பதவிகள் வழங்கப்படாமை. மகிந்தவும் கோதபாயவும் ஜனாதிபதியாக இருந்த காலங்களில் ஊழல்வாதிகள் என அறியப்பட்ட அமைச்சர்களான ஜோன்சன் பெர்னான்டோ, மகிந்தானந்த அளுத்கமகே, ரோகித அபயகுணவர்த்தன ஆகியோரை அமைச்சர்களாக நியமிப்பதில் ரணில் விருப்பம் காட்டாதிருப்பது ரகசியமன்று.

அதேசமயம், இவர்கள் மூவரும் அவ்வப்போது விடும் அறிக்கைகள் ரணிலின் ஆட்சித் திறமையையும் அரசியல் சாணக்கியத்தையும் பாராட்டுவதாக அமைந்து வருகிறது. அமைச்சு பதவிகளை எதிர்நோக்கியே இவ்வாறு நற்சான்றிதழ்களை இவர்கள் வழங்குவதாக அரசியல் செதுக்குனர்கள் கருத்து வெளியிடுகின்றனர்.

இலங்கை அரசாட்சியில் காலத்துக்குக் காலம் நான்கு தேர்தல் நடைபெற வேண்டும். உள்;ராட்சிச் சபைகள், மாகாண சபைகள், நாடாளுமன்றம், ஜனாதிபதிக்கான தெரிவு என்பவற்றுக்கே தேர்தல்கள் இடம்பெற வேண்டும். ஆனால், இவை நான்குமே பல கேள்விக்குறிகளோடு ஊடகங்களின் ஊகங்களுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

சுயாதீன தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமாக இந்த மாதம் 25ம் திகதி நடத்தவிருந்த உள்;ராட்சித் தேர்தலை நுள்ளாமலும் கிள்ளாமலும் காணாமல் போகச்செய்த ரணிலின் அரசியல் சித்து விளையாட்டு இலங்கை வரலாற்றில் வித்தியாசமான புதிது. சமகாலத்தில் உள்;ராட்சிச் சபைகளுக்கான தேர்தல் எல்லைகள் நிர்ணயக் குழு அதன் முதலாவது அறிக்கையை கடந்த வாரம் கையளித்தது. நாடளாவிய ரீதியில் தற்போதுள்ள 8,719 எண்ணிக்கை உறுப்பினர்களை 4,714 ஆகக் குறைக்க இக்குழு சிபார்சு செய்துள்ளது.

மாகாண சபைத் தேர்தல்கள் பற்றி சில மாதங்களுக்கு முன்னர் கருத்து வெளியிட்ட ரணில், அந்தந்த மாவட்டங்களிலுள்ள உள்;ராட்சிச் சபைகளின் உறுப்பினர்களை உள்ளடக்கியதாக மாகாண சபைகளை நிர்வகிக்கலாம் என்ற தமது நோக்கத்தை வெளியிட்டிருந்தார். ஜனாதிபதி என்ற வகையில் சும்மா ஒரு முசுப்பாத்தியாக அவர் இதனை சொல்லியிருக்க மாட்டார். அவரது மனதில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் ஒரு திட்டத்தை மக்களின் நாடி பிடித்து பார்க்க – நோட்டம் விட மெதுவாக இதனை கசிய விட்டுள்ளார்.

ஜே.ஆர்.ஜெயவர்த்தனவின் ஆட்சிக் காலத்தில் அவரது சிந்தனையில் உருவான மாவட்ட சபைகள் உருவாக்கத்தை ஒட்டியதாக மாகாண ஆலோசனைச் சபைகளை அமைக்கும் ஆலோசனையையும் சில மாதங்களுக்கு முன்னர் ரணில் வெளியிட்டதையும் இலகுவாக மறந்துவிட முடியாது.

நாடாளுமன்றத் தேர்தலும், ஜனாதிபதித் தேர்தலும் அடுத்தடுத்து இடம்பெறுமென அரசியல் கட்சிகள் மத்தியில் கருத்து வேரூன்றியுள்ளது. சிறிமாவோ பண்டாரநாயக்கவும், ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும் முறையே 1970 மற்றும் 1977 தேர்தல்களில் வெற்றி பெற்ற பின்னர் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை தேர்தலை வைக்காமலே நீடித்ததை ரணிலும் பின்பற்றக்கூடுமெனவும் சிலர் கருதுகின்றனர். சகல கட்சிகளதும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதனை மனதார வரவேற்பர். தற்போதுள்ள சூழ்நிலையில் தாங்கள் மீளவெற்றி பெறுவதில் நம்பிக்கை இல்லாதிருப்பவர்களும், ஓய்வுதியம் கிடைப்பதை எதிர்பார்த்திருப்பவர்களும் தேர்தல்களைப் பின்போடும் விடயத்தில் ரணிலின் பக்கமே. (இதில் தமிழர் அரசியல் கட்சிகள் விதிவிலக்கன்று).

ரணில் விக்கிரமசிங்க விரைவில் இந்தியா பயணிக்க இருப்பதாக வெளிவரும் தகவல்களை தொடர்ந்து தமிழ் தேசிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அவரை ரகசியமாக சந்தித்து உரையாடி வருகின்றனர். இந்தியா புறப்படுவதற்கு முன்னர் ஆகக்குறைந்தது வடக்குக்காவது மாகாண சபை தேர்தலை நடத்தி விட்டால் இந்திய பிரதமர் மோடியை மனம் குளிர வைக்கலாமென ரணிலுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அதற்கிடையில் சஜித் அணியைச் சேர்ந்த சிலரை முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனரட்ன தலைமையில் தம்பக்கம் இழுக்க ரணில் தரப்பு பேச்சுகளில் இறங்கியுள்ளது. எவரையும தனியாகவன்றி ஒரு கூட்டமாக இழுப்பதன் மூலம் பொதுஜன பெரமுனவையும் வழிக்குக் கொண்டு வரலாமென ரணில் நம்புகிறார்.

ஜனாதிபதித் தேர்தல் நடைபெறுமானால் பசில் ராஜபக்சவை களமிறக்க பெரமுனவில் ஒரு அணி நாட்டம் காட்டுகிறது. மகிந்தவும் அவரது குடும்பமும் இதற்கு ஒருபோதும் பச்சைக்கொடி காட்ட மாட்டார்கள். தமது மகன் நாமலை ஜனாதிபதி கதிரையில் அமர்த்தும் ஆசையிலிருக்கும் மகிந்த, அதுவரைக்கும் ரணிலை அந்தக் கதிரையில் வைத்திருப்பது தமக்கு சாதகமாக இருக்குமென நம்புகிறார்.

சிங்கள தேச அரசியல் எதிர்காலத்தையே அனைவரும் உற்றுநோக்கி வரும் இன்றைய சூழல், தமிழர் தாயகத்தில் அரச இயந்திரங்கள் மேற்கொள்ளும் பௌத்த மயமாக்கல் அடாவடியை தடுக்க முடியாத அபாய நிலையை உருவாக்கியுள்ளது. இந்துக்களின் வழிபாட்டுத் தலங்களை அழித்தொழிப்பதும், புதுப்புது விகாரைகளை முளையிட வைப்பதும், சட்டத்தை சாதகமாக்கி நீதிமன்ற உத்தரவுகளை தங்கள் பாதுகாப்புக்கு பயன்படுத்துவதும் தொடர்கதையாகவுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் அமைச்சர்கள்கூட எதுவும் செய்ய முடியாது தள்ளப்படுகின்றனர்.

நல்லாட்சிக் காலத்தில் ரணில் பிரதமராக இருந்தபோது அமைச்சராகவிருந்த சஜித் பிரேமதாச தமிழர் பகுதிகளில் ஆயிரம் பௌத்த விகாரைகள் அமைக்கப்படுமென்று அறிவித்திருந்தார். அன்று வீடமைப்பு அமைச்சராகவிருந்த சஜித் புதிய வீட்டுத் திட்டங்களோடு விகாரைகளையும் அமைக்க திட்டமிட்டிருந்தார்.

இந்த அறிவிப்பு வெளியான நல்லாட்சிக் காலத்து பிரதமர் ரணில் இன்று ஜனாதிபதி. இந்த அறிவிப்பை வெளியிட்ட அன்றைய அமைச்சர் சஜித் பிரேமதாச இன்று எதிர்கட்சித் தலைவர். பதவிகள் வழியாக இவர்கள் இடம் மாறி இருந்தாலும் தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமித்து பௌத்த மண்ணாக்குவதில் இவர்கள் ஒரே வண்டியின் இரட்டை மாடுகள்.

தமிழ் மண்ணுக்கு விமோசனம் இந்திய பிரதமர் மோடியிடமும், தமிழர் பிரதேசத்தில் குறுகிய காலத்தில் தீவிரமாக செயற்படும் சிவசேனவிடமும் என்றாகி வருவது எந்தளவுக்கு பயனளிக்கும் என்று தெரியாது. மோடியும் ரணிலும் எதிர்பார்த்தவாறு சந்திப்பார்களாயின் இதற்கு விடை கிடைக்கும்.

மூல இணைப்பு: https://www.pathivu.com/2023/04/vfdgrey65765u.html

About Tamil Diaspora News.com 585 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்