அபிவிருத்தி என்னும் பெயரில் இயற்கை வழங்களை சுரண்டுதை தடுப்பதற்கு போர்க்கொடி தூக்கிய மன்னார் ஆயர்!

காற்றாலை சோலார் மின்உற்பத்தியென டக்ளஸ் முதல் வடக்கு ஆளுநர் வரை கல்லா கட்டத்தொடங்கியுள்ள நிலையில் மன்னார் ஆயர் போhக்கொடி தூக்கியுள்ளார்.

பொன்னாவெளி சீமெந்து தொழிற்சாலை பிரச்சினை தொடர்பில் நேரில் பார்வையிட வடக்கு ஆளுநரை அவர் கோரியுள்ளார். இப்பூமியானது நாம் அனைவரும் வாழ்வதற்கான பொது இல்லம். ஆகவே நாம் எமது முன்னோரிடமிருந்து எவ்வாறு வளத்தோடும் செழிப்போடும் இந்த இயற்கை வளங்களைப் பெற்றுக் கொண்டோமோ இவ்வாறு நமது நாளைய தலை முறையிடம் கையளிக்க வேண்டிய கடப்பாடு நமக்கு உள்ளது என மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி எனும் பெயரில் எமது மாவட்டத்தின் இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதையும், அழிக்கப்படுவதையும் நாம் அனுமதிக்க முடியாது.

இதனால் குறிப்பிட்ட நபர்கள் இதை அபகரிப்பதும், அழிப்பதும் குற்றமாகும். மன்னார் மாவட்டத்தின் இயற்கை வளங்களுக்கு அச்சுறுத்தலான முக்கிய விடயங்களை நாம் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

கனியவள அகழ்வு, காற்றாலை திட்டம், சட்டவிரோத மண் அகழ்வு இந்திய இழுவைப் படகுகளில் அத்து மீறிய நுழைவு, காடழிப்பு, கடலோர கண்டல் தாவரங்கள் அழிப்பு, வனவிலங்குகள் சரணாலயத்துக்கு சொந்தமான காணிகள் தனி நபர்களினால் அபகரிக்கப்படுதல் என்பனவாகும்.

இவற்றினால் நாம் எதிர்நோக்கும் பாரிய விளைவுகள், பேரழிவுகள் பற்றி மக்கள் தெளிவடைய வேண்டும். சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

இயற்கையை பாதுகாக்கும் பொறுப்புடைய அதிகாரிகள் இது தொடர்பில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு வினையமாக கேட்டுக்கொள்கிறோம்.

அதேவேளை, தொண்டு நிறுவனங்களும், சர்வதேச நிறுவனங்களும், இயற்கைவள பாதுகாப்பு செயற்பாட்டாளர்களும், இயற்கைவள சட்டவாளர்களும், பொதுமக்களும் இணைந்து செயலாற்றுவதற்கு அழைப்பு விடுக்கிறோம்.

இயற்கையை பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் செயற்பாடுகளுக்கும் எமது முழுமையான ஒத்துழைப்பு இருக்கும்.” என தெரிவித்தார்.