வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்கள் உடைத்து எறியப்பட்டன!

வுனியா, நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் உடைத்து வீசப்பட்டுள்ளதுடன், ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளமை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

வெடுக்குநாறி மலையில் இந்து மத வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொல்பொருள் திணைக்களமும், நெடுங்கேணி பொலிஸாரும் பல்வேறு தடைகளை ஏற்படுத்தி வந்ததோடு, தொல்பொருள்கள் சார்ந்த சட்ட ஏற்பாடுகளின் பிரகாரம், கடந்த 2021ஆம் ஆண்டு வவுனியா நீதவான் நீதிமன்றில் வழக்கினையும் தாக்கல் செய்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு விசாரணைகள் வவுனியா நீதிமன்றில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவந்த நிலையில், தொல்பொருள் சின்னங்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் ஆலய நிர்வாகத்தினர் விளக்கமறியலிலும் வைக்கப்பட்டனர்.

எனினும், கடந்த வருடம் இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஆலயத்தின் பூசகர் மற்றும் நிர்வாகத்தினர் வழக்கிலிருந்து தற்காலிகமாக விடுதலை செய்யப்பட்டனர்.

அத்தோடு, தொல்பொருள் சின்னங்களை அகற்றியது தொடர்பில் உண்மையான குற்றவாளிகளை ஆதாரங்களுடன் கண்டறிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு பொலிஸாருக்கு நீதவானால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று (26) காலை குறித்த ஆலயத்துக்கு சென்ற கிராம மக்கள் மற்றும் பூசகர் ஆலய விக்கிரகங்கள் திருடப்பட்டு, உடைத்தழித்து, எறியப்பட்டமையை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

குறிப்பாக, ஆலயத்தின் பிரதான விக்கிரகமான ஆதிலிங்கம் அகழ்ந்து எடுக்கப்பட்டு, அருகில் இருந்த புதருக்குள் வீசப்பட்டிருந்தது.

அதேவேளை பிள்ளையார், அம்மன், வைரவர் விக்கிரகங்களும் பெயர்த்தெடுக்கப்பட்டு திருடிச் செல்லப்பட்டுள்ளன. இதனால் ஆலயத்துக்கு சென்று வழிபடும் பக்தர்கள், கிராமவாசிகள் மற்றும் தமிழ் மக்கள் அதிர்ச்சியும் கவலையும் கொள்கின்றனர்.

Vedukunari Hill

 

இணைப்பு: https://www.virakesari.lk/article/151432

About Tamil Diaspora News.com 630 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்