உருத்தெரியாது போகும் அபாயத்தில் கொக்குளாய் முதல் நாயாறு வரையிலான 6 தமிழ் கிராமங்கள்

image

“இலங்கை மகாவலி அதிகாரசபை சபையின் ‘எல்’ வலயம் விசேட ஆளுகைப் பிரதேசத்தில் அமைந்துள்ள முஹ{துபட பத்து (கரைத்துரைப்பற்று) பிரதேச செயலாளர் ஆளுகைப் பிரதேசத்தின் கொக்குளாயிலிருந்து நாயாறு வரை அமைந்துள்ள ஆறு கிராம சேவகர்கள் பிரிவுகளின் நிர்வாகச் செயற்பாடுகளை முன்னெடுத்தல்” என்ற தலைப்பில் ஐ.ஆர்.12022ஃ40 இலக்கமிடப்பட்ட அமைச்சரவை விஞ்ஞாபனம் கடந்த மாதம் 26ஆம் திகதி தயாரிக்கப்பட்டு நீர்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்கவினால் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்படுவதற்காக தயார்ப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த நகர்வுபற்றிய தகவல்கள் கசிந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை கடந்த புதன்கிழமை தொடர்பு கொண்டிருக்கின்றார்.

இந்நிலையில் மறுதினமான வியாழக்கிழமை, பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனைத் தொடர்பு கொண்ட ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, “அமைச்சரவை அனுமதிக்கான பத்திரங்கள் பற்றிய குழு கூட்டத்தில்  மகாவலி ‘எல்’ வலயத்துக்கான விசேட ஆளுகையைக் கோரும் பத்திரத்தினை முன்னகர்த்துவதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிறுத்தியுள்ளார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த தகவல் பிரச்சினையை கையில் எடுத்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் மற்றும் கரைத்துரைப்பற்று பிரதேச செயலாளார் பிரிவில் உள்ள ஆறு கிராமசேவகர் பிரிவு வாழ் மக்கள் ஆகியோருக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் நிம்மதிப்பெருமூச்சை விடுவதற்கு இடமளித்திருக்கின்றது,

ஆனால், அமைச்சரவைப் பத்திரத்தினை நகர்த்தும் முயற்சி நிறுத்தப்பட்டிருப்பதால் மகாவலி ‘எல்’ வலயச் செயற்பாடு நிரந்தரமாக கைவிடப்பட்டுவிட்டது என்று அர்த்தம் கொள்ள முடியாது. ‘புயலுக்கு முந்திய அமைதி’ போல அடுத்ததொரு பெருநகர்வுக்கு முன்னதான சிறிய ‘பின்னகர்வு’ தான் இது.

நாட்டின் பணவீக்கம் 69.8சதவீதமாக இருந்துகொண்டிருக்கையில் தான் மகாவலி ‘எல்’ வலயச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அமைச்சரவை பத்திரத்தினை விடயதானத்திற்கு பொறுப்பான அமைச்சர் ரொஷான் ரணசிங்க முன்னகர்த்த முயன்றிருக்கின்றார்.

இந்தச்செயற்பாடொன்றே மகாவலி ‘எல்’ வலய செயற்றிட்டத்தை எந்தச் சூழலிலும் நாட்டின் ஆட்சிப்பீடத்தில் இருக்கும் எந்தவொரு அரசாங்கமும் நிச்சயம் கைவிடப்போவதில்லை என்ற செய்தியை மிகத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது.

‘தேசிய ரீதியாக அபிவிருத்தி கருத்திட்டங்கள் செயற்படுத்துகையில் குறைந்தளவு கவனம் செலுத்தப்பட்டுள்ள முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அநுராதபுரம் போன்ற மாவட்டங்களில் அமையப்பெற்றுள்ள ஆற்றுப்படுக்கைகளுடன் தொடர்புடையதாகவுள்ள அடுக்கடுக்கான குளத்தொகுதிகளின் இடவமைப்பை ஆராய்ந்த வண்ணம் சிறு, நடுத்தர மற்றும் பாரிய நீர்த்தேக்கங்களை நிர்மாணித்து குறைந்தளவில் பொருளாதார மற்றும் சமூக ரீதியாக அபிவிருத்தி அடைந்துள்ள பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதே நோக்கம்’ என்ற கோசத்துடன் 1988.04.14 மற்றும் 2007.03.07 ஆகிய திகதிகளில் இரு வர்த்தமானி அறிவிப்புக்கள் வெளியிடப்பட்டதை இலகுவில் மறந்துவிடமுடியாது.

அத்துடன், குறித்த வர்த்தமானி அறிவிப்புக்களுக்கு அமைவாக,  196,987ஹெக்டெயர்களை உள்ளடக்கி மகாவலி ‘எல்’வலயம் பிரகடனப்படுத்தப்பட்டதோடு, வன ஜீவராசிகள், மற்றும் வனப் பராமரிப்பு திணைக்களத்துக்கு உரித்தான பிரதேசங்கள் மற்றும் மாவட்ட செயலாளர்களின் கீழ் நிருவகிக்கப்படுகின்ற பிரதேசங்களைத் தவிர, 42,847ஹெக்டெயரில் மகாவலி அதிகாரசபையினால் முதல்நிலைத் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதோடு 29,953ஹெக்டெயரில் அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

குறித்த பகுதியில் 2012முதல் 2023 வரையிலான காலப்பகுதியில் நீர்ப்பாசன அபிவிருத்திக்கு அப்பால் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக திறைசேரியினால் 3957மில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகாரசபை உறுதிப்படுத்தியுள்ளது.

அதேநேரம், மகாவலி ‘எல்’ வலயத்தின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நாயாறு முதல் கொக்குளாய் வரையிலான கொக்குளாய் கிழக்கு, கொக்குளாய் மேற்கு, கருநாட்டுக்கேணி, கொக்குத்தொடுவாய் மத்தி, கொக்குத்தொடுவாய் வடக்கு, செம்மலை ஆகிய ஆறு கிராமசேவகர் பிரிவுகளின் 15,743ஹெக்டெயரில் எவ்விதமான செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை என்றும் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மேற்படி ஆறு கிராமசேவகர் பிரிவுகள் உட்பட மகாவலி ‘எல்’ வலயத்திற்கான வாழ்வியல், வாழ்வாதார நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மூன்று தசாப்தங்களுக்கு முன்பிருந்தே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, 1984ஆம் ஆண்டு முதல் முன்னெடுக்கப்படும் தீவிர ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளால் ஏற்கனவே தமிழர்களின் பூர்வீக பகுதியான மணலாறு கையகப்படுத்தப்பட்டு விட்டது.

மணலாறு, ‘வெலிஓயா’ என்று பெயர் மாற்றப்பட்டு, தற்போது 9 தனிச் சிங்கள கிராமசேவகர் பிரிவுகளைக் கொண்டதாகவும் தென்னிலங்கையில் இருந்து வருவிக்கப்பட்ட 6000 குடும்பங்கள் மீள்குடியேற்றப்பட்ட பகுதியாகவும் காணப்படுகின்றது.

இந்தச் செயற்பாடுகள் மகாவலி ‘எல்’ வலய விஸ்தரிப்பு என்ற தலைப்பின் கீழாகவே முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்தவொரு விடயமே மகாவலியின் பெயரால் தமிழர்களின் பூர்வீகம் அழிக்கப்பட்டமைக்கான வடுக்களின் ‘வலிகளை’ உணர்த்தி நிற்கிறது.

இவ்வாறான நிலையில், வெலிஓயாவின் ஜனக்கபுர, கிரிபெவன்வெவ ஆகியவற்றின் எல்லைகளாகவுள்ள கொக்குளாய், கொக்குத்தொடுவாய் முதல் நாயாறு வரையில் உள்ள தமிழர்களின் பூர்வீக நிலங்களை கையகப்படுத்துவதை இலக்கு வைத்து போரின் பின்னரான காலத்தில் தீவிரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும், அவ்விதமான ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும், தமிழர் தரப்பால் முட்டுக்கட்டைகள் இடப்பட்டிருக்கின்றன. அவற்றில் குறிப்பாக, 2018 ஆகஸ்ட் 28 அன்று பாரிய மக்கள் போராட்டம் இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து மகாவலி விரிவாக்கத்தை நிறுத்துமாறு 2020 ஒக்டோபர் 23இல் மூன்று கட்சித்தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடிதம் மூலம் கோரியிருந்தார்கள். 2021 மே 7இல் மகாவலி அதிகாரசபையின் பணிப்பாளருக்கு சாள்ஸ் நிர்மலநாதன் தனிநபராக கடிதம் அனுப்பினார்.

தொடர்ந்து அப்போது விடயதானத்துக்கு பொறுப்பாக இருந்த சமல் ராஜபக்ஷவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு மீளாய்வுக்குழுவொன்றும் நியமிக்கப்பட்டதோடு அக்குழுவின் ‘களஆய்வு’ அறிக்கை வெளியிடப்படும் வரையில் ‘எல்’வலயம் விஸ்தரிப்புச் செய்வதில்லை என்றும் இணக்கப்பாடு எட்டப்பட்டது. பின்னர், இந்த ஆண்டின் பெப்ரவரி மாதம் 23ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தினையும் மேற்கொண்டனர்.

இறுதியாக, புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பின்போதும், மகாவலி ‘எல்’ வலய விஸ்தரிப்பை நிறுத்துமாறு கோரப்பட்டபோது சதகமான சமிக்ஞை வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

இவ்வாறு மகாவலி ‘எல்’ வலயத்தில் உள்ள மேற்படி ஆறு கிராமசேவகர் பிரிவுகளையும் கையகப்படுத்தும் முயற்சிகள் ‘உறை’ நிலையில் வைக்கப்பட்டிருந்த சூழலில் தான் தற்போது அமைச்சரவை அனுமதியுடன் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு கங்கணங்கட்டப்பட்டுள்ளது.

அதேநேரம், அமைச்சரவையூடான முயற்சியின்போது, அதிகாரசபையின் அதிகாரங்களுக்கு அமைய திட்டமொன்றை தயாரித்து செயற்பாட்டை முன்னெடுக்கப்படுதல், பிரதேச செயலாளர்கள் இதுவரையில் முன்னெடுத்துள்ள காணி நிர்வாக தகவல்களை மகாவலி அதிகாரசபையிடத்தில் கையளிப்பதோடு காணிக் கச்சேரிகள் நடத்தப்படும் சந்தர்ப்பங்களில் பிரதேசசெயலாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைப்பு மற்றும் பங்களிப்பையும் அதிகாரசபை உத்தியோகத்தர்களுக்கு வழங்குதல், புதிய அபிவிருத்தி பிரதேசங்களை இணைத்தல், அதற்கான உத்தியோகத்தர்களை வதிவிட கருத்திட்ட முகாமையாளரின் கீழ் நிர்வகிக்கப்படுதல் உள்ளிட்ட செயற்பாடுகளுக்கும் அனுமதி கோரப்பட்டுள்ளது.

இவ்வாறான அனுமதி கோரலானது, பிரதேச செயலாளர், மாவட்ட செயலாளர் உள்ளிட்டவர்களின் காணிகளை நிர்வகிக்கும் அதிகாரங்களை நேரடியாக மகாவலி அதிகாரசபையின் கீழாக தம் வசப்படுத்துவதற்கான முஸ்தீபாகும்.

அதேநேரம், இந்த ஆறு கிராம செயலாளர் பகுதியில் 1171குடும்பங்கள் காணப்படுவதாகவும், அதில் 901தமிழ் குடும்பங்களும் 269சிங்களக் குடும்பங்களும் (கொக்குத்தொடுவாயில் வாடிகளை கையகப்படுத்தி குடியேறியுள்ள 213தென்னிலங்கை கடற்றொழிலாளர்கள் குடும்பங்களும் அடக்கம்) ஒரு முஸ்லிம் குடும்பமும் உள்ளது.

ஆனால் 1984இல் 2,910குடும்பங்கள் இப்பிரதேசங்களை விட்டு வெளியேறியிருந்த நிலையில் தற்போது 1,279குடும்பங்கள் இருப்பதாக புள்ளிவிபரங்கள் காணப்படுகின்றமை இங்கு சுட்டிக்காட்ட வேண்டியதாக உள்ளது.

எனவே, தற்போது நிறுத்தப்பட்டதாக கூறப்படும் அமைச்சரவைப் பத்திரம் மீண்டும் நகர்த்தப்படாது  என்பதற்கு எந்தவிதமான உத்தரவாதங்களும் இல்லை.  அவ்வாறு நகர்த்தப்பட்டால் மகாவலி ‘எல்’ வலய விரிவாக்கம் செவ்வனே முன்னெடுக்கப்படும். ஆகவே, விரிவாக்கத்துக்கு முன்னரான ‘விளைவுமிக்க’ செயற்பாடுகளே நிரந்த முற்றுப்புள்ளிக்கான கதுவுகளைத் திறக்கும்.

இணைப்பு (Source): https://www.virakesari.lk/article/137288

About Tamil Diaspora News.com 628 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்