இந்திய – இலங்கை அமைதி ஒப்பந்தத்தை இலங்கை மீறுகிறது! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவிப்பு

Rajkumar3

இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தை இலங்கை மீறுகிறது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் சங்கத்தினர் ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பிலேயே அந்த சங்கத்தின் இணைப்பாளர் கோ. ராஜ்குமார் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தம், 1987 அப்போதைய இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்த்தனவுக்கும் இடையே ஜூலை 29, 1987ம் ஆண்டு ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்கும் நோக்குடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தம் ஆகும்.

இந்திய-இலங்கை அமைதி ஒப்பந்தத்தின்படி, நிலத்தை விநியோகிக்கும் அதிகாரம் வட மாகாணத்திற்கு தான் உள்ளது.

வட மாகாணத்திலிருந்து சிங்களவருக்கு எந்த நிலங்களையும் விநியோகிக்க இலங்கைக்கு எந்த அதிகாரமும் இல்லை. இது சர்வதேச ஒப்பந்தத்தின் மொத்த மீறலாகும். கொழும்பு வலுக்கட்டாயமாக தமிழரின் விருப்பத்திற்கு எதிராக என்ன செய்தாலும் அது சர்வதேச சமூகத்தால் மாற்றப்படும்.

கொசோவோவில் உள்ள செர்பியர்களுக்கும் இதேதான் நடந்தது, இதை இலங்கைக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். இலங்கை பல ஆக்கபூர்வமான விடயங்களைச் செய்ய புவி-அரசியல் அழுத்தத்தில் உள்ளது.

சிங்களவருக்கு நிலங்களை விநியோகிப்பது இலங்கையில் சர்வதேச ஈடுபாட்டை துரிதப்படுத்தும். காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மற்றும் போரால் பாதிக்கப்படட தமிழர்கள் பலர், விவசாயம் செய்யவோ, வீடு கட்டவோ எந்த நிலமும் இல்லாமல் தவிக்கிறார்கள்.

ஏனென்றால் இலங்கை இராணுவத்தால் பல தமிழரின் நிலங்கள் சூறையாடப்பட்டுள்ளன. அமெரிக்காவும் மற்றும் இந்தியாவும் தமிழருக்கு அரசியல் தீர்வைக் காணும்வரை அரசாங்கம் காத்திருக்க வேண்டியது நல்லது. இந்த தீவுக்கு அமைதி தரக்கூடிய ஒரே வழி இதுதான் என குறிப்பிட்டுள்ளார்.

Link: https://www.tamilwin.com/community/01/261324?ref=home-latest

Video Link: https://www.facebook.com/story.php?story_fbid=278706396912694&id=265986223570334