கிளிநொச்சியில் அமைந்துள்ள ஸ்கந்தபுரத்தில் பயனுள்ள நீர்ப்பாசன முறையை நிறுவுவதற்கு புலம்பெயர் தமிழ் மக்கள் கூட்டுறவு முறையை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தியுள்ளனர்.

The Tamil Diaspora has successfully implemented a cooperative system to establish an effective irrigation system in Skandapuram, located in Kilinochchi.

கிளிநொச்சி மாவட்டம் ஸ்கந்தபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள நீர்ப்பாசனத்திட்டமானது, யாழ்ப்பாண மத்திய கல்லூரியின் முன்னாள் மாணவரும், நெதர்லாந்து மனிதநேய செயற்பாடுகளுக்கான கூட்டுறவுச் சங்கத்தின் திட்டப்பணிப்பாளருமாகிய திரு. சந்திரநாதனும், அவருடைய சங்க ஏனைய அங்கத்தவர்களுடைய ஒருங்கமைப்பின் கீழ் முன்னெடுக்கப்பட்டது. இத் திட்டமானது சுமார் மூன்று கோடியே முப்பத்தியெட்டு லட்சம் ரூபா செலவில், வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளது.

இந்த ஏரிநீர்பாசனத் திட்டத்திற்கான நிதி உதவியை “kilipeople” எனும் UK அமைப்பினரும், solar panels installation ஐப் பொறுப்பேற்று அதற்கான நிதி உதவியை Swiss நாட்டு “தண்ணீர்” எனும் அமைப்பினரும், நெதர்லாந்து நாட்டிலுள்ள “வில்ட கான்சன்” (Wilde Ganzen) எனும் அமைப்பினரும், மற்றும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் நிதி உதவி வழங்கினார்கள். இந்த திட்டத்தை தங்களுக்கு செய்துதந்தமைக்கு ஸ்கந்தபுர ஏற்றுநீர்பாசன மக்கள் தங்களுடைய நன்றியை தெரிவிக்கின்றனர். இந்த ஏரிநீர்பாசனத் திட்டமானது அந்த மக்களுக்கு கிடைத்த மிகப் பெரிய வரப்பிரசாதமாகும்.

தமிழ் மக்களின் அடிப்படை ஆதாரமான விவசாயத்திற்கு தேவையான நீர்ப்பாசனம் சரிவர கிடைக்காமல் இருந்த நிலையில், அதை தீர்த்துவைப்பதற்காக, நீண்ட கால நோக்கில் இந்த நீர்ப்பாசனத்திட்டமானது செய்து முடிக்கப்பட்டுள்ளது.

சிங்கள அரசாங்கத்தை தங்கி இருக்காமல், நல்ல திட்டமிடலுடன் செயற்பட்ட புலம்பெயர்ந்த தமிழர்கள், சட்டரீதியாக செயற்பட்டு, பணத்தினைத் திரட்டி, 200க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்கள் பயன்பெறச் செய்துள்ளார்கள்.

இதே போன்றே, புலம்பெயர் மக்களின் ஒன்றிணைவில், தமிழர் தாயக பகுதியை வளப்படுத்தி தன்னிறைவான ஒரு தாயகமாக உருவாக்கலாம் என்பதற்கு ஒரு நல்ல உதாரணமாக இச்செயற்பாட்டை எடுத்துக் கொள்ளலாம்.

இதுபோன்ற புலம்பெயர்ந்த தமிழர்களின் முயற்சிகள், தமிழர் தாயக பகுதிகளுக்கு மேலும் பல சென்றடைய வேண்டும். இந்த காணொளியின் இறுதியில் இத் திட்டம் எப்படி செயல்வடிவம் பெற்றது என்பது பற்றி திரு சந்திரநாதன் அவர்கள் விளக்குகின்றார்.

இந்தத் திட்டத்தில் பங்கேற்கவோ, புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தவோ அல்லது உதவி வழங்கவோ யாராவது ஆர்வமாக இருந்தால், தயவுசெய்து infocsnha@gmail.com என்னும் மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளவும்.
நீங்கள் அவர்களின் இணையத்தளமான www.csnha.com இல் அவற்றைப் பார்வையிடலாம். CSNHA, மனிதாபிமான நடவடிக்கைகளுக்கான நெதர்லாந்தின் கூட்டுறவு சங்கம், மனிதாபிமான முயற்சிகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.

நன்றி,
புலம்பெயர் தமிழர்களின் செய்திகள்

நவம்பர் 08, 2023