விடுதலைப் புலிகளின் முயற்சி தோல்வியடைகின்றதா! ஈழத்தமிழினத்திற்கு ஏற்பட்டுள்ள பாரிய சவால்

மூன்று தசாப்த ஈழ விடுதலைப் போராட்டத்தில் விடுதலைப் புலிகளின் முயற்சி ஈழத்தமிழர்களின் அலட்சியத்தினால் தோல்வியடைந்து செல்வதாக ஈழ ஆதரவாளர்களிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

தமிழையும் தமிழர்களையும் அவர்களது இருப்பையும் பாதுகாத்துச் செல்லவே ஈழ விடுதலைப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு இருந்தது.

ஈழத்தில் வாழும் தமிழர்கள் தங்களின் தாயகத்தின் இடப்பெயர்களை தமிழில் பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். தமிழில் உள்ள இடப்பெயர்களை சிங்களவர்கள் சிங்கள மொழியாக்கத்தில் பயன்படுத்தி வருகின்றனர்.

உலகின் பல பாகங்களிலும் பரந்து வாழும் தமிழர்கள் தாங்கள் வாழும் இடங்களிலும் தமிழ்ப் பெயர்களை பயன்படுத்தி வரும் போது தான் தமிழ் உயிர்ப்போடு தொடர்ந்து வாழும்.

ஈழப்போராட்டம் என்பது ஈழத்தமிழர்கள் தமிழையும் தமிழர்களையும் காத்துக்கொள்ள முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டமாகும்.

மணலாறு – வெலி ஓயா என மாறியது

மணலாறு என்பது ஈழத்தின் இதயம் என போற்றப்படும் இடமாகும். இது வட மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தினையும் இணைக்கும் நிலப்பகுதியாக இருக்கின்றது.

மணலாறு என்ற ஆற்றின் காரணத்தினால் இந்தப் பெயர் ஏற்படடதாக செம்மலையில் உள்ள தமிழாசிரியர் மணலாறு பற்றிய தன் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார்.

முல்லைத்தீவு கொக்கிளாய் வீதியில் மணலாற்றுச் சந்தியில் மணலாற்றுக்கான இடங்காட்டி நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதில் மூன்று மொழிகளிலும் மணலாற்றுக்கான பாதையினை அறிந்துகொள்வதற்காக குறிப்பு உள்ளது.

பொதுவாக இடங்காட்டிகளில் மூன்று மொழிகளிலும் இடங்களையும் அவற்றுக்கான தூரங்களையும் பாதையின் திசைகளையும் குறிப்பிட்டிருப்பது வழமையான ஒன்றாகும்.

மணலாறு என தமிழில் எழுதப்பட்டுள்ளது. ஏனைய இரு மொழிகளிலும் வெலிஓயா என குறிக்கப்பட்டுள்ளது.

தமிழ் பகுதிகளில் உள்ள இடங்களை இடங்காட்டிகளில் மூன்று மொழிகளிலும் தமிழ்ப்பெயராகவே எழுதியிருக்க வேண்டும் என கொக்குத்தொடுவாயினைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவருடன் இது தொடர்பில் பேசியபோது அவர் குறிப்பிட்டிருந்தார்.

சிங்களப் பகுதிகளில் உள்ள இடங்களில் அந்த இடங்களின் பெயர்களை இடங்காட்டிகளில் தமிழில் எழுதும் போதும் சிங்கள பெயரையே தமிழில் எழுதியிருக்கின்றதனை அவதானிக்கலாம்.

ஆயினும் தமிழ் பகுதிகளில் இடங்களின் பெயர்களை இடங்காட்டிகளில் எழுதும் போது தமிழ்ப் பெயர்களின் சிங்களப் பெயராக்கத்தினை ஆங்கிலத்தில் எழுதுவது விரும்பத்தகாத அணுகுமுறையாக இருக்கும்.

ஆங்கிலத்தில் ஒரு இடத்தின் பெயரை இடங்காட்டியில் எழுதுவதன் நோக்கம் தமிழ் மற்றும் சிங்கள மொழிகள் தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளவே!

அதாவது வெளிநாட்டவர்கள் அறிந்து கொள்வதற்காகவே! மணலாறு என்ற சொல் வெளிநாட்டவரிடையே பரீட்சயப்பட்டு போவதை தடுத்து வெலிஓயா என்பதை அடையாளப்படுத்தும் நோக்கமாக இருக்க வேண்டும் என ஓய்வு நிலை தமிழாசிரியர் ஒருவர் இது தொடர்பிலான தேடலின் போது தன்னுடைய மதிப்பீட்டினை எடுத்துரைத்திருந்தார்.

மணலாறு என்று தமிழிலும் வெலிஓயா என்று ஆங்கிலத்திலும் குறிப்பிட்டுள்ள இடங்காட்டி தொடர்பில் தமிழரசியல் செயற்பாட்டாளர்கள் கவனமெடுக்க வேண்டும் என்பது சுட்டிக்காட்டத்தக்க விடயமாகும்.

மணலாறு என மும்மொழிகளிலும் ஒரேமாதிரியாகவே குறிக்கப்பட வேண்டும் என்பது ஈழ ஆதரவாளர்களின் நோக்காக இருக்கின்றது. ஆங்கிலத்திலும் ”MANALARU” என வேண்டும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

பிரபலமான ஈழவரலாற்று நூலாசிரியரான விஜயனால் மணலாறு என்ற நூல் எழுதப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

தம்பலகமம் – தம்பலகமுவ 

திருகோணமலையில் உள்ள தம்பலகமம் என்ற கிராமம் தம்பலகமுவ என சிங்களப்பெயராக்கம் செய்யப்பட்டு ஆங்கிலத்தில் தம்பலகமுவ என குறிக்கப்பட்டு தமிழ் விளம்பரங்களில் பயன்படுத்துவதனை மட்டக்களப்பு கதிரவெளியில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி ஒன்றில் அவதானிக்க முடிகின்றது.

இது தொடர்பில் கதிரவெளியில் சர்பத் குளிர்பான வியாபாரம் செய்து கொண்டிருந்த பெண்ணொருவர் குறிப்பிடும் போது தமிழ் கிராமம். தமிழ் பெயராக இருக்கும் தம்பலகமம் என்பதைத் தான் தம்பலகமுவ என குறிக்கப்பட்டிருப்பதாக விளக்கியிருந்தார்.

தமிழ் பெயர்களை சிங்கள மொழியாக்கம் செய்து பயன்படுத்தும் இயல்பு தொடர்பில் திருகோணமலையில் வாழ்ந்து வரும் தமிழார்வலரும் சிங்கள மயாக்கலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் இளைஞர் குறிப்பிடும் போது சிங்களவர்கள் தங்கள் மொழியில் இடமொன்றில் பெயரை மாற்றி பயன்படுத்துகின்றனர்.

அது போல் தமிழர் நாமும் சிங்கள பெயர்களை தமிழில் மாற்றி பயன்படுத்துவதில்லை. ஆனாலும் தமிழ் கிராமங்களின் பெயர்களை சிங்களத்திலோ அல்லது ஆங்கிலத்திலோ மாற்றிப் பயன்படுத்தும் போதும் நாம் அவற்றை தமிழில் மட்டுமே பயன்படுத்தி வரவேண்டும்.

இந்த விடயத்தில் கூடிய கவனம் எடுத்தால் எங்கள் எழுத்திலும் பேச்சிலும் இடப் பெயர்கள் தமிழில் மட்டுமே இருக்கும். அப்போது ஏனைய மொழியினரும் அவற்றை தமிழிலேயே பயன்படுத்தப் பழகிக் கொள்வார்கள் என குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கருத்துக்கள் தொடர்பில் தமிழாசிரியர் ஒருவரிடம் கேட்டபோது இடங்களின் பெயர்கள் மற்றும் நபர்களின் பெயர்களை மொழி மாற்றம் செய்து பயன்படுத்தல் வழக்கமன்று.

பெயர்களை மொழிமாற்றம் செய்து பயன்படுத்தல் இனங்காணலின் போது குளறுபாடுகளை ஏற்படுத்தி விடும். இனம் காண்பதற்காகவே பெயர்களை இடப்படுகின்றன.

அந்த இளைஞரது கருத்துக்கள் பாராட்டப்பட வேண்டியவை. இன்றைய சூழலில் பின்பற்ற வேண்டிய கருத்துக்கள் அவை என குறிப்பிட்டிருந்தார்.

இரணைமடுச் சந்தி இரணைமடு ஜங்சன் ஆனது

இரணைமடுச் சந்தி என்பதனை ஆங்கிலத்தில் குறிப்பிடும் போது இரணைமடு ஜங்சன் (IRANAIMADU JUNCTION) என குறிப்பிடுகின்றதனை அவதானிக்க முடிகின்றது.

தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் இடங்களை தமிழில் எழுதுவது தான் நன்று. அப்போது தான் வெளிநாட்டவர்கள் மற்றும் வேற்று மொழியினர் தமிழ் இடங்களை அறிந்து கொள்ள முடியும்.

ஜங்சன் (JUNCTION) என்பதனை சந்தியாகவே குறிப்பிட்டிருக்கலாமே? என்று முறிகண்டி பிள்ளையார் கோவிலில்  வழிபாட்டில் ஈடுபட்டிருந்த புலம் பெயர் தமிழர் ஒருவரிடம் கேட்ட போது அவர் குறிப்பிட்டதும் நோக்கத்தக்கது.

அவரது கருத்துக்கு அணி சேர்ப்பது போல புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தினை இனங்கண்டு கொள்ள உதவும் இடங்காட்டியினை சுட்டிக்காட்ட முடியும் என்பதும் இங்கு நோக்கத்தக்கது.

புளியம்பொக்கணை நாகதம்பிரான் கோவில்

புளியம்பொக்னை நாகதம்பிரான் ஆலயம் பரந்தன் முல்லைத்தீவு வீதியில் பரந்தனில் இருந்து 11 கிலேமீற்றர் தூரத்தில் வீதிக்கு வடக்கே 4 கிலோமீற்றர் தூரத்தில் இருக்கின்றது.

புளியம்பொக்கனைச் சந்தியில் பரந்தன் முல்லைத்தீவு விதியில் புளியம் பொக்கனை நாகதம்பிரான் வீதியும் வட்டக்கச்சி வீதியும் இணைந்து நாற்ச் சந்தியினை ஆக்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாகதம்பிரான் கோவில் என்பது ஆங்கிலத்தில் அப்படியே “NAGATHAMPIRAN KOVIL“ என குறிக்கப்பட்டிருக்கின்றது.

இது சாத்தியம் என்றால் இரணைமடுச் சந்தியினையும் “IRANAIMADU SANTHY“ என குறிக்கப்படலாம் என்பதனையும் இங்கே நோக்கி சுட்டிக்காட்டலாம்.

வீதிகளில் உள்ள இடங்காட்டிகளில் விடும் சிறு தவறும் கூட ஈழ விடுதலைப்போராட்டத்தின் நோக்கத்தினை சிதைத்துவிடும் என்பதினை உணரத் தலைப்படாத சமூகமாக தாயக வாழ் ஈழத்தமிழ்ச் சமூகம் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.

தமிழறிஞர்கள் இது தொடர்பில் கவனமெடுத்துச் செயற்பட முடிந்தால் சாதாரண தமிழ் மக்களிடையே தமிழறிவும் தமிழ்ச் சொற்களின் பயன்பாடும் அதிகரிக்கும்.அடுத்த சந்ததிக்கு தங்கள் இடங்களை தமிழில் அறிந்து கொண்டு பயன்படுத்தும் களம் தானே கிடைத்துவிடும் என புளியம் பொக்கனை நாகதம்பிரான் கோவிலில் சந்திக்க முடிந்த தமிழாசிரியர் இது தொடர்பில் தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.

ஆனையிறவு – எலிபன்ற் பாஸ் ஆனது 

ஆனையிறழனவும் ELEPHANT PASS ,ஆனது யாருக்காக? அதனை அப்படியே ANAIJIRAVU என ஆங்கிலத்தில் எழுதும் போது ஆனையிறவு என்ற தமிழ் வடிவம் வேற்று மொழியினர் இடையே கொண்டு சேர்க்கப்படும்.

அது அவர்களது இலக்கியங்களில் பயன்படுத்தப்படும் போது நெடுங்காலம் கடந்த பின்னும் தமிழ்க் கிராமங்கள் தமிழோடு இனம் காணப்படும் என்பது திண்ணம்.

எல்லோரும் இணைந்து ஒருமித்து இது தொடர்பில் கவனமெடுத்து பயனடைய முயல வேண்டும் என இயக்கச்சியில் உள்ள றீச்சா சுற்றுலாத் தளத்தில் தன் பொழுதினை செலவிட வந்திருந்த கனடா நாட்டில் வாழ்ந்துவரும் கோப்பாயினை சொந்த இடமாக கொண்ட பெண்ணொருவர் குறிப்பிட்டிருந்தார்.

றீச்சாவில் பயன்படுத்தப்பட்டது போல் தமிழ்ப் பெயரில் உள்ள அடையாளங்காட்டிகள் பற்றியும் அவர் சுட்டிக் காட்டி இது போல் ஏன் வீதிகளிலும் வியாபார நிலையங்களிலும் செயற்பட முடியாது என கேள்வியெழுப்பியிருந்தார்.

மொழிகளை கற்றுக்கொள்வோம். தேவைக்கேற்ப பயன்படுத்தியும் கொள்வோம்.தமிழில் பேசும் போது ஆங்கிலம் கலந்து பேச வேண்டும் என்ற கற்பனை வாழ்வை கைவிட்டு தமிழ் என்றால் தமிழிலும் ஆங்கிலம் என்றால் ஆங்கிலத்திலும் தெளிவாக பேசிப் பயன்பெறுவதில் என்ன மரியாதைக் குறைவு இருந்து விடப்போகிறது என அவர் மற்றொரு கேள்வியையும் எழுப்பியிருப்தார்.

இது தொடர்பில் நீண்டகால முயற்சியில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே இந்தக் கட்டுரையினை எழுதுவதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முயற்சி

தமிழில் பெயர்களை இட வேண்டும் என தமிழீழ விடுதலைப்புலிகள் எடுத்திருந்த முயற்சிகள் பலவிருந்தன.

தங்களின் உறுப்பினர்களிடையே தமிழில் பெயரிடுதலை கடைப்பிடித்து வந்திருந்தனர். படைக்கலன்கள் மற்றும் படையணிகளின் செயற்பாடுகளில் அதிகளவில் தமிழ்ச் சொற்களை பயன்படுத்தியும் வந்திருந்தனர்.

தமிழ்ப் பெயர் கையேடு என்ற நூலினையும் அவர்கள் வெளியிட்டிருந்தனர். அதில் 44000 தமிழ்ப்பெயர்கள் தொகுக்கப்பட்டிருந்ததாக ஒட்டுசுட்டானில் உள்ள தழிழார்வலர் ஒருவர் குறிப்பிட்டிருந்தார்.

அந்த தமிழ்ப் பெயர்க் கையேடு தன்னிடம் இருந்ததாகவும் இறுதிப் போரின் இடப் பெயர்வின் போது அந்த நூல் கைவிட்டுப் போனதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

வியாபார நிலையங்கள் மற்றும் ஆவணங்களில் தமிழில் பெயர்களை பயன்படுத்துவது ஊக்கப்படுத்தப்பட்டது.

பிறக்கும் குழந்தைகளுக்கு தமிழில் பெயரிடப்பட்டுவற்காக வைத்தியசாலைகளில் பிறப்புச் சான்றிதழுக்காக பிள்ளையின் பெயர்களை தெரிவு செய்வதற்கான பெயர்ககையேடுகள் பேணப்பட்டிருந்ததாகவும் அந்த பயன்பாட்டு முறையிலேயே தன் பிள்ளைகளுக்கு அவர் தமிழ்ப் பெயர்களை வைத்ததாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

பெரியவர்களுக்கு பிறப்புச் சான்றிதழில் 13 ம் கூட்டில் புதிய பெயரினை சேர்க்க முடியும் என்ற சட்டவலுவினை பயன்படுத்தி தங்களின் பெயர்களை தமிழ்ப்பெயர்களாக மாற்றிய நண்பர்களும் இருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

எனினும் இப்போதெல்லாம் அப்படி இல்லை.முன்னர் தமிழில் பெயரிருந்த பலர் பிறப்புச் சான்றிதழில் உள்ள பெயர் மாற்றும் சட்ட ஏற்பாட்டின் வழியே தங்கள் பெயர்களை மாற்றிக் கொண்டனர் என்பதும் கவலைக்குரிய விடயமாகும்.

தான் மாற தானாக மாறும்

தான் மாற தானாக மாறும் தத்துவத்திற்கமைய ஈழத்திலும் புலத்திலும் ஒவ்வொரு தமிழரும் தமிழை நன்றே கற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழின் நூல்களையும் கற்றுத்தேறுவதோடு தமிழர் தம் வரலாறுகளையும் அறிந்து பெருமை கொள்ளும்படி தமிழ் இளைய சந்ததியினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

உலகில் உள்ள எத்தனை மொழியையும் கற்றுக்கொண்டு வாழ்ந்து போகலாம்.ஆனாலும் தாய்மொழியில் தேர்ச்சியடைதல் பயன்மிக்கதாகும். தமிழ்மொழியைத் தாய் மொழியாக கொண்ட ஈழத்தமிழர் தமிழில் பெயரை பயன்படுத்தும் போது முப்பதுவருட ஈழப்போராட்டத்தின் முயற்சியின் பயனொன்று மக்களிடையே சென்றதாக சிறிதேனும் மகிழலாம்.

நன்றி: https://tamilwin.com/article/the-issue-of-rights-of-tamils-1713230992