முல்லைத்தீவில் மனிதர்களுக்கும் காணிகள் இல்லை மாடுகளுக்கும் காணிகள் இல்லை – ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் வனவளத் திணைக்களத்தின் ஆளுகையிலேயே மிக அதிகளவிலான நிலப்பரப்பு காணப்படுவதாக முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்கள் குடியிருக்க காணி இல்லாத நிலையில் வாழ்வதாகவும், 89 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு மேய்ச்சல் தரை இல்லை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு மாவட்டத்தில் வாழும் 3389 குடும்பங்களுக்கு குடியிருப்பதற்கு நிலம் இல்லை. தொழில் முயற்சிக்கென 28,626 இளைஞர், யுவதிகள் ஒரு ஏக்கர் வீதம் தமக்குக் காணி தருமாறு மாவட்ட செயலகத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ள போதிலும் அதற்கு சாதகமான பதில்கள் இல்லை.

முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் 2022ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரத்தின் அடிப்படையில், முல்லைத்தீவு மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பானது 2415 சதுர கிலோ மீற்றர் தரையாகவும், 202 சதுர கிலோ மீற்றர் உள்ளக நீர்ப் பிரதேசமாகவும் காணப்படுகிறது.

இதில் கடந்த 2009ஆம் ஆண்டுக்கு முன்னர் 222006 ஏக்கர், 36.72 சதவீதமான நிலம் வனவள திணைக்களத்தின் ஆளுகைக்குட்பட்டு காணப்பட்டது.

இந்நிலையில் கடந்த 2009ஆம் ஆண்டுக்குப் பின்னர் 167484 ஏக்கர் 30.37 நிலப்பரப்பை வனவள திணைக்களம் மேலதிகமாக தனது ஆளுகையின் கீழ் கொண்டுவந்துள்ளது.

தற்போது காடு பேணல் சட்டத்தின் கீழ் ஒதுக்கக்காடுகளாக மீண்டும் 42,631 ஏக்கர் 7.15 சதவீதமான நிலப்பரப்பை வனவள திணைக்களம் கோரியுள்ளது. அவ்வாறு குறித்த நிலப்பரப்பும் வனவள திணைக்களத்தினால் உள்வாங்கப்பட்டால் மொத்தமாக உள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் நிலப்பரப்பில் 74.24 சதவீதபான நிலப்பரப்பு வனவள திணைக்களத்தின் ஆளுகைக்குள் உள்வாங்கப்பட்டுவிடும்.

மிகுதி நிலப்பரப்பில் பெரும்பகுதியை மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, தொல்லியல் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், கனியமணல் திணைக்களம், படையினர் உள்ளிட்ட தரப்பினர் ஆளுகை செய்கின்றனர்.

குறிப்பாக வனவள திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிலப்பரப்பில், மாவட்டத்தின் அபிவிருத்தி தேவைக்காக சுமார் 50,000 ஏக்கர் காணி தேவை எனவும், அவற்றை விடுவித்து தருமாறு மாவட்ட செயலகம் கோரிக்கை விடுத்துள்ளபோதிலும் முறையான பதில்கள் இதுவரையில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால், வேறு திணைக்களங்கள் காணிக் கோரிக்கை முன்வைக்கும்போதும், குடியேற்றங்களுக்காக காணிக் கோரிக்கைகள் முன்வைக்கப்படுகின்றபோதும் காணிகளை விடுவிக்கின்ற நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் 3389 குடும்பங்களுக்கு இதுவரை குடியிருக்க காணி இல்லாத நிலை காணப்படுகிறது.

இதுதவிர முல்லைத்தீவு மாவட்டத்தில் 89 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ள நிலையில், கால்நடைகளுக்குரிய மேய்ச்சல் தரைகளும் இதுவரையில் வழங்கப்படவில்லை.

நீண்ட காலமாக இவ்வாறு மேய்ச்சல் தரைக்கான கோரிக்கை முன்வைக்கப்படுகின்றபோதிலும் இதுவரை மேய்ச்சல் தரைக்குரிய காணிகள் வழங்கப்படவில்லை.

அந்த வகையில், தற்போது முல்லைத்தீவு மாவட்டத்தில் தமிழ் மக்கள் குடியிருக்க காணி இல்லாததோடு, கால்நடைகளுக்கும் மேய்ச்சல் தரைக்கான காணிகள் இல்லை என்கிற நிலைமையே ஏற்பட்டுள்ளது என்றார்.

About Tamil Diaspora News.com 630 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்