மகாவலி என்னும் போர்வையில் வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டாம்! மட்டக்களப்பில் போராட்டம்

மட்டக்களப்பு – சித்தாண்டி பாடசாலைக்கு முன்பாக கடந்த வெள்ளிக்கிழமை (15.09.2023) காலை முதல் பெரியமாதவணை, மயிலத்தமடு கால்நடை பண்ணையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பெரியமாதவணை, மயிலத்தமடு பண்ணையாளர்கள் தங்களது மேய்ச்சல் தரைகளை தங்களுக்கு மீட்டுத்தர கோரி எட்டாவது நாளாகவும் சுழற்சி முறையிலான கவன ஈர்ப்பு பேராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்போது போராட்டக்காரர்கள் மகாவலி என்னும் போர்வையில் எமது வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டாம் ,மேய்ச்சல் தரைப்பகுதியில் முன்னெடுக்கப்படும் அத்துமீறிய குடியிருப்புகளை உடனடியாக நிறுத்தவும், அரசாங்கமே மயிலத்தமடு,மாதவனையை மேய்ச்சல்தரையாக பிரகடனப்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்ததுடன் பல்வேறு கோசங்களையும் எழுப்பியிருந்தனர்.

இந்த போராட்டத்தில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினர் ஆதரவு வழங்கியதுடன் சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை லூத் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கி கலந்துகொண்டுள்ளார்.

கிழக்கின் பொருளாதாரமே கால்நடையும் விவசாயமுமாகும். அதனை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கின்றது.இவ்வாறான நிலையில் கடந்த எட்டு தினங்களாக போராடிவரும் கால்நடை பண்ணையாளர்களின் கோரிக்கை தொடர்பில் அரசும், அரச அதிகாரிகளும் பாராமுகமாக இருப்பது ஏன் என சிவில் சமூக செயற்பாட்டாளர் அருட்தந்தை லூத் தெரிவித்துள்ளார்.

மேய்ச்சல் தரை

இன்றைய போராட்டத்தில் பெருமளவான கால்நடை பண்ணையாளர்கள் கலந்துகொண்டதுடன் தமது நியாயமான கோரிக்கையினை தீர்ப்பதற்கு ஜனாதிபதி முன்வரவேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்துள்ளனர்.

எட்டாவது நாளாக இந்த போராட்டம் நடைபெற்றுவரும் தினத்தில் மயிலத்தமடு, மாதவனை பகுதியில் பெருமளவான சிங்கள மக்கள் தமது மேய்ச்சல் தரை காணிகளை அபகரிக்கும் செயற்பாட்டினை முன்னெடுத்துவருவதாகவும் கால்நடை பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுவரை ஆயிரக்கணக்கானவர்கள் தமது மேய்ச்சல் தரைப்பகுதிக்குள் காணிகளை அபகரிக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாகவும் இவை தடுத்து நிறுத்தப்படாவிட்டால் எதிர்காலத்தில் மாடுகளை கொண்டு செல்ல முடியாத நிலையே ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்காரணமாக எதிர்காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படும் நிலைமை காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் மேய்ச்சல் தரைப்பகுதியில் இன்றைய தினமும் பெருமளவானோர் தமது காணிகளுக்குள் நுழைந்து அத்துமீறிய வகையிலான செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதாக பண்ணையாளர்கள் இதன்போது தெரிவித்துள்ளனர்.