வடகிழக்கு உலக வங்கி நிதி – சர்வதேச சட்ட & ESF இணக்கம் குறித்த கவலை

இலங்கையின் வடகிழக்கில் உலக வங்கி நிதியுதவிகளை இடைநிறுத்த வேண்டுமென அமெரிக்கப் புலம்பெயர்ந்த தமிழர்கள் கோரிக்கை

பிப்ரவரி 10, 2026

அமெரிக்கப் புலம்பெயர்ந்த தமிழர்கள், இலங்கையின் வடகிழக்கில் மேற்கொள்ளப்படவுள்ள தற்போதைய மற்றும் எதிர்கால World Bank Group நிதியுதவி பெற்ற அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாக தீவிரமான கவலைகளை வெளியிட்டு, உலக வங்கியின் நிர்வாக இயக்குநர்கள் மற்றும் மூத்த நிர்வாகத்திடம் உத்தியோகபூர்வ நினைவுப் பதிவு ஒன்றை சமர்ப்பித்துள்ளனர்.

இந்த நினைவுப் பதிவு, வடகிழக்கில் எந்தவொரு அபிவிருத்தி நிதியுதவியும் வழங்கப்பட வேண்டுமானால் அது சர்வதேச சட்டத்திற்கும் — குறிப்பாக சுயநிர்ணய உரிமைக்கும் — மேலும் உலக வங்கியின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதுகாப்பு வடிவமைப்பிற்கும் (Environmental and Social Framework – ESF) முழுமையாக இணங்க வேண்டும் என வலியுறுத்துகிறது.

பின்னணி

2022–23 பொருளாதார நெருக்கடியால் இடைநிறுத்தப்பட்ட கட்டமைப்பு, கல்வி மற்றும் அபிவிருத்தித் திட்டங்களை மீண்டும் செயல்படுத்துவதற்கும், சுமார் 4.1 பில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான பேரிடர் சேதங்களுக்கு நிதியுதவி வழங்குவதற்கும் உலக வங்கி குழு இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொருளாதார மீட்சியின் அவசியத்தை ஏற்றுக்கொள்ளும் நிலையில், வடகிழக்கில் முந்தைய காலங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட அரசின் அபிவிருத்தித் திட்டங்கள் தமிழ் மக்களுக்கு தீங்கான, திரும்பப்பெற முடியாத மற்றும் பாகுபாடான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளன என சுட்டிக்காட்டப்படுகிறது.

முன்வைக்கப்பட்ட முக்கிய கவலைகள்

வடகிழக்கில் அரசால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்தித் திட்டங்கள் கீழ்கண்ட விளைவுகளை ஏற்படுத்தியதாக நினைவுப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது:

  • அரச ஆதரவுடன் குடியேற்றம் மூலம் மக்கள் தொகை மாற்றம்
  • வனச்சூழல் அழிவு, நீர்வழி மாற்றம், கடலோர மற்றும் விவசாய நில அழிவுகள்
  • பாரம்பரிய வாழ்வாதாரங்கள் மற்றும் உணவு பாதுகாப்பு பாதிப்பு
  • போர் பின்னணியில் சமரசத்திற்குப் புறம்பான மக்கள் தொகை மாற்ற அரசியல்

இவ்விளைவுகள் தற்செயலானவை அல்ல; அமைப்புசார்ந்த மற்றும் முன்கூட்டியே கணிக்கக்கூடிய விளைவுகள் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

சுயநிர்ணய உரிமை மற்றும் காலனித்துவச் சூழல்

வடகிழக்கு பகுதி, ஐரோப்பிய காலனித்துவத்திற்கு முற்பட்ட காலம் முதலாக தமிழ் மக்களின் வரலாற்றுச் சொந்தத் தாயகமாக இருந்து வந்துள்ளது என வலியுறுத்தப்படுகிறது.

1960களில் உருவாக்கப்பட்ட ஐ.நா. காலனித்துவ ஒழிப்பு கொள்கைகளின் அடிப்படையில், மக்கள் தங்களது நிலம், வளங்கள் மற்றும் அரசியல் எதிர்காலம் குறித்து சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

1948ஆம் ஆண்டு அதிகார மாற்றம் தமிழ் மக்களின் “சுதந்திரமான, முன்கூட்டிய மற்றும் தகவலறிந்த சம்மதம்” இன்றி நிகழ்ந்ததால், அது நிறைவுறாத காலனித்துவ ஒழிப்பு செயல்முறை எனக் கருதப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

உலக வங்கியின் பொறுப்புகள்

உலக வங்கியின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக பாதுகாப்பு வடிவமைப்பின் கீழ்:

  • பாதிக்கப்படும் சமூகங்களுடன் பொருத்தமான ஆலோசனை
  • பலவீனமான மற்றும் புறக்கணிக்கப்பட்ட சமூகங்களின் பாதுகாப்பு
  • சுற்றுச்சூழல் நிலைத்தன்மை
  • மோதல் உணர்திறன் கொண்ட அபிவிருத்தி

எனப்படும் உறுதிப்பாடுகள் உள்ளன.

தமிழ் மக்களின் உண்மையான பங்கேற்பும் “Free, Prior and Informed Consent (FPIC)” முறையும் இன்றி திட்டங்களை முன்னெடுத்தால், அது உலக வங்கிக்கு சட்டரீதியான மற்றும் மதிப்பீட்டு ஆபத்துகளை ஏற்படுத்தக்கூடும் என எச்சரிக்கப்படுகிறது.

உலக வங்கியிடம் வைக்கப்பட்ட கோரிக்கைகள்

அமெரிக்கப் புலம்பெயர்ந்த தமிழர்கள் உலக வங்கியிடம்:

  1. வடகிழக்கில் அபிவிருத்தி நிதியுதவிகளை இடைநிறுத்துதல் அல்லது ஒப்புதல் வழங்காமல் இருப்பது;
  2. உண்மையான தமிழ் அரசியல் பிரதிநிதித்துவத்தை இணைத்துக் கொள்ளுதல்;
  3. Free, Prior and Informed Consent (FPIC) முறையை கடைப்பிடித்தல்;
  4. மக்கள் தொகை மாற்றம், நில அபகரிப்பு அல்லது சுற்றுச்சூழல் சேதத்தை ஏற்படுத்தும் திட்டங்களுக்கு ஆதரவு வழங்காமல் இருத்தல்;
  5. சுயாதீன மற்றும் மோதல் உணர்திறன் கொண்ட ஆய்வுகளை முன்னெடுத்தல்

எனக் கோருகின்றனர்.

“அபிவிருத்தி என்பது சட்டபூர்வம், சம்மதம் மற்றும் வரலாற்றுச் சூழலைப் பிரித்து பார்க்க முடியாத ஒன்று. வடகிழக்கில் தமிழ் மக்களின் சம்மதம் இன்றி மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி, கட்டமைப்பு அநீதியை மேலும் உறுதிப்படுத்தும் அபாயம் கொண்டது,” என அமெரிக்கப் புலம்பெயர்ந்த தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

உலக வங்கி, பொருளாதார மீட்சியின் பெயரில் வரலாற்று அநீதிகளை நிலைநிறுத்தாத வகையில் செயல்பட வேண்டியது அவசியம் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.