பேராசிரியர் ராஜ் சோமதேவவின் செம்மணி விளக்கங்கள் குறித்து சுயாதீன ஆய்வு கோரி உப்சாலா பல்கலைக்கழகத்திற்கு அமெரிக்கத் தமிழர் புலம்பெயர் அமைப்பு கடிதம்


US Tamil Diaspora’s press release is now available on AP News: Read the press release on AP News

பேராசிரியர் ராஜ் சோமதேவவின் செம்மணி விளக்கங்கள் குறித்து சுயாதீன ஆய்வு கோரி உப்சாலா பல்கலைக்கழகத்திற்கு அமெரிக்கத் தமிழர் புலம்பெயர் அமைப்பு கடிதம்

உண்மையையும் நீதியையும் தேடும் குடும்பங்களுக்காக கல்விசார் ஆய்வு, வெளிப்படைத்தன்மை மற்றும் சுயாதீன தடயவியல் விசாரணை கோரிக்கை

நியூயோர்க், அமெரிக்கா — இலங்கையின் யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகள் தொடர்பாகப் பேராசிரியர் ராஜ் சோமதேவ முன்வைத்துள்ள விளக்கங்களைச் சுயாதீன கல்விசார் ஆய்வுக்கு உட்படுத்துமாறு கோரி, அவர் முனைவர் பட்டம் பெற்ற சுவீடனின் உப்சாலா பல்கலைக்கழகத்தின் தொல்லியல், பண்டைய வரலாறு மற்றும் மரபுரிமைப் பாதுகாப்புத் துறைக்கு அமெரிக்கத் தமிழர் புலம்பெயர் அமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

அவரது அறிக்கை, அதற்கான ஆதாரங்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆய்வு முறைகளை ஆராய்வதற்கான மதிப்பீட்டுக்கு ஏற்பாடு செய்யுமாறு அல்லது தகுதிவாய்ந்த சுயாதீன நிபுணர்களைப் பரிந்துரைக்குமாறு அக்கடிதம் பல்கலைக்கழகத்தைக் கேட்டுக்கொள்கிறது.

செம்மணியில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் மற்றும் அவை புதைக்கப்பட்ட சூழலின் சில அம்சங்களைத் தொற்றுநோய், பண்பாட்டு வழக்கங்கள் அல்லது இயற்கைப் பேரழிவு விளக்கக்கூடும் என யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படும் கருத்துகள் தொடர்பாகவே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

“காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களைத் தேடும் குடும்பங்களுக்கு, சரிபார்க்கக்கூடிய ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்பட்ட விளக்கங்கள் வழங்கப்பட வேண்டும். ஒரு சாத்தியக்கூறு என்பது உறுதிசெய்யப்பட்ட ஆய்வு முடிவிலிருந்து தெளிவாக வேறுபடுத்தப்பட வேண்டும்” என அமெரிக்கத் தமிழர் புலம்பெயர் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த விளக்கங்களை உறுதிப்படுத்தும் தீர்மானமான தடயவியல் ஆதாரங்களையோ, மனித எச்சங்களுடன் தொடர்புபடுத்தக்கூடிய குறிப்பிட்ட தொற்றுநோய் அல்லது பேரழிவை அடையாளப்படுத்தும் ஆவணங்களையோ தாம் இதுவரை காணவில்லை என அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும், இதனால் முழுமையான அறிக்கையில் அத்தகைய ஆதாரங்கள் இல்லை என்று முடிவுசெய்ய முடியாது என்பதையும் அமைப்பு ஏற்றுக்கொள்கிறது. ஆகவே, உரிய நடைமுறைகளின் ஊடாக அறிக்கையையும் அதற்கான ஆதார ஆவணங்களையும் அணுகுவதற்கும், அவற்றைச் சுயாதீனமாக ஆய்வு செய்வதற்கும் அது அழைப்பு விடுக்கிறது.

சுயாதீன ஆய்வுக்கான கேள்விகள்

பின்வரும் விடயங்களை ஆராயுமாறு கடிதம் கோருகிறது:

▪ அறிவியல் ஆதாரங்கள்: தொற்றுநோய் அல்லது இயற்கைப் பேரழிவு என்ற விளக்கத்தை ஆதரிக்கும் கண்டுபிடிப்புகள் என்ன? குறிப்பாக, சிறுவர்களின் பாடசாலைப் பைகள், தனிப்பட்ட உடைமைகள் மற்றும் எலும்புக்கூடுகளில் காயங்கள் காணப்படுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் சுயாதீனமாகச் சரிபார்க்கப்பட்டு மதிப்பிடப்பட வேண்டிய நிலையில், அவை எவ்வாறு கருத்தில் கொள்ளப்பட்டுள்ளன?
▪ வரலாற்றுப் பொருத்தம்: குறிப்பிட்ட வரலாற்று நிகழ்வு ஏதேனும் அடையாளம் காணப்பட்டுள்ளதா? அதன் காலப்பகுதி, சுயாதீனமாக உறுதிசெய்யப்பட்ட புதைகுழிகளின் காலத்துடன் பொருந்துகிறதா?
▪ அடக்க முறைகள் குறித்த விளக்கம்: முறைப்படியான இறுதிச்சடங்கு அடக்கங்கள் என்ற விளக்கத்திற்கு என்ன ஆதாரம் உள்ளது? நீதிக்குப் புறம்பான கொலைகள் மற்றும் ஏனைய சட்டவிரோதக் கொலைகள் உள்ளிட்ட மாற்று விளக்கங்கள் எவ்வாறு மதிப்பிடப்பட்டன?
▪ நிபுணர்களின் பங்களிப்பு: எந்த முடிவுகளுக்குத் தடயவியல் நோயியலாளர்கள், மானிடவியலாளர்கள் அல்லது பிற சுயாதீன நிபுணர்களின் மதிப்பீடு தேவைப்படுகிறது?
▪ உறுதியின்மை: நேரடியாகக் கண்டறியப்பட்ட விடயங்கள், ஆரம்பநிலைக் கருதுகோள்கள் மற்றும் ஆதாரங்களால் உறுதிப்படுத்தப்பட்ட முடிவுகள் ஆகியவற்றை அறிக்கை தெளிவாக வேறுபடுத்துகிறதா?
“ஒழுங்கமைக்கப்பட்ட அல்லது முறைப்படியான அடக்கங்கள் என்ற விளக்கம், அந்த நபர்கள் எவ்வாறு உயிரிழந்தார்கள் என்பதைக் கண்டறியும் விசாரணைக்கு மாற்றாக அமையக்கூடாது. சட்டவிரோதக் கொலைகள் உட்பட, சாத்தியமான ஒவ்வொரு விளக்கமும் ஆதாரங்களின் அடிப்படையில் பாரபட்சமின்றி ஆராயப்பட வேண்டும்” என அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கல்விசார் ஆய்வும் வெளிப்படைத்தன்மையும்

இந்தக் கோரிக்கை பேராசிரியர் சோமதேவவின் நோக்கங்களை முன்கூட்டியே தீர்மானிப்பதோ, அவர் முறைகேட்டில் ஈடுபட்டதாக நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டை முன்வைப்பதோ அல்ல என அமெரிக்கத் தமிழர் புலம்பெயர் அமைப்பு வலியுறுத்துகிறது. நம்பகமான ஆய்வு முழுமையான ஆவணங்களையும் பரிசீலிப்பதுடன், அவர் தனது ஆய்வு முறைகளை விளக்கவும் எழுப்பப்பட்டுள்ள கவலைகளுக்குப் பதிலளிக்கவும் வாய்ப்பளிக்க வேண்டும்.

ஒருவருக்கு உப்சாலா பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கியிருப்பது, அவரது பிற்காலத் தொழில்சார் பணிகளைப் பல்கலைக்கழகம் அங்கீகரிக்கிறது என்று பொருள்படாது என்பதையும் அமைப்பு ஏற்றுக்கொள்கிறது. முன்வைக்கப்பட்ட விளக்கங்களின் அறிவியல் அடிப்படையை மதிப்பிடுவதற்கும், மேலும் தேவைப்படும் விசாரணைகளை அடையாளம் காண்பதற்கும் கல்விசார் உதவியையும் சுயாதீன நிபுணத்துவத்தையுமே இக்கடிதம் கோருகிறது.

அனைத்து மனித எச்சங்கள், பதிவுகள் மற்றும் தொடர்புடைய ஆதாரங்களைப் பாதுகாக்கவும், மேலும் சுயாதீன சர்வதேச தடயவியல் ஆய்வுகளுக்கு வழிவகுக்கவும், விசாரணை குறித்த அர்த்தமுள்ள தகவல்கள் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குக் கிடைப்பதை உறுதிசெய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அமெரிக்கத் தமிழர் புலம்பெயர் அமைப்பு வலியுறுத்துகிறது.

காணாமல் ஆக்கப்பட்ட தமது அன்புக்குரியவர்களைத் தேடும் தாய்மார்களுடனும் குடும்பங்களுடனும் ஒற்றுமையாக நின்று, உண்மையைக் கண்டறிவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பாதுகாக்கும் முழுமையான விசாரணைக்கு அமைப்பு அழைப்பு விடுக்கிறது.

“செம்மணியில் புதைக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு, ஆதாரங்கள் எங்கு வழிநடத்தினாலும் அவற்றைப் பின்பற்றும் வெளிப்படையான, பாரபட்சமற்ற விசாரணை கிடைக்க வேண்டும். அறிவியல் ரீதியான உறுதியின்மைகள் கடுமையான ஆய்வின் மூலம் தீர்க்கப்பட வேண்டும்; உண்மையைத் தேடும் முயற்சி தொடர்ந்து திறந்த நிலையில் இருக்க வேண்டும்.”

அமெரிக்கத் தமிழர் புலம்பெயர் அமைப்பு (US Tamil Diaspora)

Relevant Links
▪ Letter to Uppsala University: US Tamil Diaspora’s request to the Department of Archaeology, Ancient History and Conservation for an independent review of the Chemmani report.
Read the letter

▪ Chemmani Mass Graves: Infectious Disease Theory Is an Insult to Tamil Victims — Another Reminder That Tamils Must Restore Their Sovereignty
Read the press release

▪ Is Professor Raj Somadeva an Archaeologist or a Magician?
Read the article