திருகோணமலை சிங்கள ஆக்கிரமிப்பிற்கு எதிராக குரல் கொடுக்க வல்ல ஒருவரிற்காக இரா.சம்பந்தன் பதவிவிலக வேண்டும்!

திருகோணமலையை கபளீகரம் செய்ய சிங்கள பேரினவாதிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளிற்கு எதிராக, உரிய நேரத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குரல் எழுப்புவதற்குக் கூட நாதியற்ற நிலையே அந்த மாவட்டத் தமிழ் மக்களின் தலைவிதியாக உள்ளது.

கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் உள்ள ஒருவருக்கு சம்பந்தன் வழி விடுவதன் மூலமும் அதே நேரத்தில் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஊடாக அவர் பாராளுமன்றத்துக்குள் மீள் பிரவேசம் செய்வதை கூட்டமைப்பின் மூன்று அங்கத்துவக் கட்சிகளும் முன் கூட்டியே உறுதிப்படுத்துவதன் மூலமும் இந்த விடயங்களை செயற்படுத்த முடியும் என சுட்டிக்காட்டியுள்ளார் தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் என். சிறிகாந்தா..

இது தொடர்பில் அவர் வெளியிட்ட அறிக்கையில்,

தமிழர் தாயகத்தின் தலைநகர் என்று உணர்வு பூர்வமாக கருதப்பட்டு வந்திருக்கும் திருகோணமலையில் அமைந்துள்ள வரலாற்றுத் தொன்மை மிகு கோணேசர் ஆலயத்தின் சுற்றாடலில் உள்ள அதன் காணிகளை ஆக்கிரமித்து கையகப்படுத்திட எடுக்கப்படும் நடவடிக்கை பற்றிய செய்திகள் அபாய அறிவிப்பாக அமைந்துள்ளன.

சுதந்திர இலங்கையில் கடந்த 74 ஆண்டுகளாக கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ள சிங்களமயமாக்கல் திட்டத்தின் கீழ் அங்குள்ள சிங்கள மக்களின் தொகை மூன்று மடங்காக பெருகியுள்ளது.

1960ல் அன்றைய மட்டக்களப்பு மாவட்டத்தில் சிங்கள குடியேற்ற வாசிகளுக்கென அம்பாறைத் தொகுதியை உருவாக்கிää அதன் மூலம் பெற்றுக்கொள்ளப்பட்ட சிங்கள பாராளுமன்ற பிரதிநிதித்துவம், 1977ல் திருகோணமலையின் நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கினை வளைத்துப் போட்டு சேருவில தொகுதி அமைக்கப்பட்டதால் இரண்டு மடங்கு ஆகியது.

1989ல் இருந்து விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின் கீழ், கிழக்கில் சிங்கள மக்களின் பிரதிநிதித்துவம், அதற்குரிய விகிதாசாரத்திற்கு மேலதிகமாகவே தொடர்ந்து உறுதிப்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இந்த நிலையில், பூகோள – அரசியல் ரீதியாக, கேந்திர முக்கியத்துவம் கொண்ட திருகோணமலையை, கூடிய விரைவில் ஒட்டு மொத்தமாக, தனது பிடிக்குள் கொண்டு வரும் நோக்கில் சிங்களப் பேரினவாதம் குறிவைத்து செயற்பட்டு வருகின்றது.

யுத்தத்தின் போது ஏற்பட்ட இடப்பெயர்வினால் வெறிச்சோடிப் போன பழந் தமிழ்க் கிராமங்களும், அவர்களின் வயல் நிலங்களும் ஆக்கிரமிப்பாளர்களின் கையிலேயே பெருமளவில் தொடர்ந்து இருந்து வருகின்றன.

இந்நிலையில், தொல்பொருட் திணைக்களத்தின் ஊடாக இதுவரையில் எடுக்கப்பட்டு வந்துள்ள நடவடிக்கைகளில் இப்போது சுற்றுலாத்துறை அமைச்சும் இணைந்துள்ளது.
இந்தக் கூட்டு முயற்சியே கோணேசர் ஆலயக் காணிகளை அபகரிக்க முன்னெடுக்கப்படுகின்றது.

இதற்கு எதிராக, உரிய நேரத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குரல் எழுப்புவதற்குக் கூட நாதியற்ற நிலையே அந்த மாவட்டத் தமிழ் மக்களின் தலைவிதியாக உள்ளது.

திருகோணமலை மாவட்டத்தின் ஒரே ஓரு தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து வரும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புத் தலைவர் சம்பந்தன், தனது தளர்வுற்ற உடல் நிலை காரணமாக களத்தில் நிற்க முடியாமல் உள்ளார்.

ஆனால் இந்தக் காரணத்திற்காக திருகோணமலை மாவட்டத் தமிழ் மக்கள் அரசியல் அனாதைகள் ஆகிவிட முடியாது.

அதே நேரத்தில் பல்வேறு அரசிற் காரணங்களுக்காக கூட்டமைப்பின் தலைவர் பாராளுமன்றத்தில் நீடிக்க வேண்டிய அவசியத்தையும் மறுத்துரைக்க முடியாது.
எனவே நடைமுறையில் உள்ள பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகளை பயன்படுத்தி இந்த இரண்டு தேவைகளையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும்.

தமது மாவட்டத்தில் நிலைகொண்டு உடனுக்குடன் செயற்படக் கூடிய பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை பெற்றுக் கொள்வதற்கு கூட்டமைப்பிற்கு வாக்களித்து மயிரிழையில் அதன் வேட்பாளரை வெற்றி பெறச் செய்த திருகோணமலை மாவட்ட தமிழர்களுக்கு முழு உரிமையும் உண்டு என்பதை தமிழ்த் தேசியத்தின் பெயரால் வலியுறுத்திக் கூற விரும்புகின்றோம்.

கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியலில் உள்ள ஒருவருக்கு சம்பந்தன் வழி விடுவதன் மூலமும் அதே நேரத்தில் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் ஊடாக அவர் பாராளுமன்றத்துக்குள் மீள் பிரவேசம் செய்வதை கூட்டமைப்பின் மூன்று அங்கத்துவக் கட்சிகளும் முன் கூட்டியே உறுதிப்படுத்துவதன் மூலமும் இந்த விடயங்களை செயற்படுத்த முடியும்.

ஆயினும் அம்பாறை மாவட்டத் தமிழ் மக்களுக்கு கடந்த இரண்டு வருடங்களாக தேசியப்பட்டியல் ஊடாக கிடைத்திருந்த பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாமல் போவது என்பது நிச்சயமாக சலசலப்புக்களை ஏற்படுத்தவே செய்யும் என்றாலும், தமிழர் தாயகத்தின் கேந்திர பூமியான திருகோணமலை தொடர்ந்து எதிர்நோக்கி நிற்கும் ஈட்டி முனை ஊடுருவல்களை உற்று நோக்கும் எவருக்கும் நிலைமையை புரிந்து கொள்வது ஒன்றும் கஷ்டமானது அல்ல.

திருகோணமலை காப்பாற்றப்பட வேண்டுமானால் விட்டுக்கொடுப்புக்கள் தவிர்க்கப்பட முடியாதவை.

இதே வேளையில் இன்னுமொரு விடயத்தையும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
கி.பி 1255ல் முழு இலங்கையையும் வெற்றி கொண்ட பாண்டிய மன்னன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் கோணேசர் குன்றின் பாறைகளில் பொறித்ததும், பின்னாட்களில் ஆங்கிலேயர் அமைத்த பிறடெறிக் கோட்டையின் முகப்பு வாசலை அலங்கரித்தவையுமான மீன் இலச்சினைகள் இரண்டும்ää ஒரு சில வருடங்களுக்கு முன்னர், அவற்றின் மேல் பூசப்பட்ட கறுப்பு வர்ணத்துக்குள் புதைக்கப்பட்டிருப்பதை திருகோணமலையில் வைத்து நாங்கள் பகிரங்கமாக சுட்டிக்காட்டியிருந்தும், அந்த விவகாரத்தை எமது மக்கள் பிரதிநிதிகள் எவரும் இதுவரை கையில் எடுக்கவில்லை என்பதையும் இச்சந்தர்ப்பத்தில் கூறாமல் இருக்க முடியவில்லை.

தமிழர் வரலாற்றை இருட்டடிப்புச் செய்வதிலும்ää வாழ்விடத்தை பறித்தெடுப்பதிலும் பேரினவாதிகள் கூட்டாக செயற்படுவதை எங்களில் எவரும் கைகட்டிப் பாத்திருக்க முடியாது.

கோணேசர் ஆலயப் பிரதேசம், ஓர் புனித பிரதேசமாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும் என அறுபதுகளில் தமிழர் தரப்பில் ஒலித்த அதே கோரிக்கையை, மீண்டும் முன்வைப்பதற்குரிய நியாயமும், அவசியமும் முன்னெப்போதும் இல்லாத அளவில் இப்போது ஏற்பட்டிருக்கின்றன.

நல்லூர்க் கந்தன் ஆலய தேர்த் திருவிழாவுக்க ஜனாதிபதி வாழ்த்து தெரிவித்திருக்கலாம். நல்லூர் சந்நிதான மடாதிபதியை தொல்பொருள் திணைக்கள ஆணையாளர் தேடி வந்து சந்தித்திருக்கலாம். இவை எல்லாம் சிங்கள பௌத்த பேரினவாதம் உலக அரங்கில் தன் சொந்தத் தேவைகளுக்காக அரங்கேற்றும் அப்பட்டமான சித்து விளையாடல்கள் மட்டுமே! இவை அறிவுள்ள தமிழர்கள் மத்தியில் ஒரு போதும் எடுபடாது. மாறாக பேரினவாதத்தின் இயல்பும் நோக்கமும் கோணேசர் குன்று உட்பட தமிழினத்தின் தொன்மையான வரலாற்றுச் சான்றுகளை அது தொடர்ந்து குறிவைத்துக் கொண்டிருப்பதில் மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இவ்வாறு குறிப்பிடபபட்டுள்ளது.

About Tamil Diaspora News.com 524 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்