ஆனந்தசங்கரியை போல செயற்பட்ட சுமந்திரனை கட்சியிலிருந்து நீக்குங்கள்: தமிழ் அரசு கட்சி நிர்வாக செயலாளர் அவசர கடிதம்!

எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கும்படி தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா ஆகியோருக்கு அவசர கடிதம் அனுப்பியுள்ளார், தமிழ் அரசு கட்சியின் நிர்வாக செயலாளர் சூ.சேவியர் குலநாயகம்.

அவர் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில்,

ஆனந்தசங்கரியும் விடுதலைப்புலிகளிற்கு எதிரான கருத்தை தெரிவித்தமையினாலேயே கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டார். அப்போது அவருக்கு எதிரான தீர்மானத்தை நானே சமர்ப்பித்திருந்தேன். சங்கரி கூறிய கருத்தை விட மோசமான கருத்தை சுமந்திரன் கூறியுள்ளார். அவரை உடனடியாக கட்சியை விட்டு நீக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

கடித்தின் முழுவடிவம்

இல 36 மாட்டின் விதி,
யாழ்ப்பாணம்
தலைவர்
இலங்கை தமிழ் அரசுக் கட்சி
யாழ்ப்பாணம்

அன்புடையீர்,

சுமந்திரனின் செவ்வி தொடர்பானது

மேற்படி விடயம் தொடர்பில் கடந்த 2004ஆம் ஆண்டு தமிழர் விடுதலைக் கூட்டணியாக இயங்கிய காலப்பகுதியில் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி எதிராக கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவ்வாறு செய்யப்பட்டமைக்கான முக்கிய காரணம் த.வி. புலிகள் தொடர்பில் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் அவர் தெரிவித்த விமர்சனங்கள் ஆகும். கட்சியின் தலைமைப் பதவி மாற்றத்திற்காகவே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அத் தீர்மானம் நடைமுறைப்படுத்தாமல் போனமைக்கு வேறு காரணங்கள் இருக்கலாம்.

இந்த அனுபவத்தின் அடிப்படையில் நமது கட்சியின் துணைப் பொதுச் செயலாளரும் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் நாடாளுமன்ற தேர்தல் அபேட்சகரருமான திரு ம.ஆ. சுமந்திரன் அவர்கள் 2020 .5 . 8 அன்று சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கியுள்ளார். அதில் தமிழினம் சார்பாக இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்தையும் த.வி. புலிகளையும் கொச்சைப்படுத்தியும் எமது கட்சி (இலங்கைத் தமிழரசுக் கட்சி) (தமிழர் விடுதலைக் கூட்டணி) தமிழீழ விடுதலைப் புலிகள் விடயத்தில் பிழையான அணுகுமுறையை கொண்டிருந்தது என்ற உண்மைக்குப் புறம்பான கருத்துக்களை கூறியுள்ளார்.

ஆனந்தசங்கரி அவர்கள் கொண்டிருந்த நிலைப்பாட்டினை விட மோசமான கருத்துக்களை வெளியிட்டதன் மூலம் தமிழ் தேசியத்திற்கும் இலங்கை தமிழரசுக் கட்சிக்கும் பிறர் துரோகங்களை வைத்துள்ளார் என்று மக்கள் கருதுகின்றனர்.

தனிப்பட்ட கருத்துக்களை மறுபடியும் கொண்டிருக்க முடியும். ஆனால் ஓர் அரசியல் கட்சியில், அதுவும் இனவிடுதலை சுதந்திரத்தை நோக்காகக் கொண்டு செயல்படும் இ.த. கட்சியில் இணைந்து நின்றுகொண்டு கூட்டுப் பொறுப்பற்ற முறையில் கருத்துக்களை வெளியிடுவது கண்டிக்கத்தக்கது. அடிப்படையில் மாறுபாடான கொள்கைகள் கருத்துக்கள் இருக்குமானால் கட்சிக்கு வெளியே சென்று விட வேண்டும். பாகிஸ்தான் நாடு பிரித்துக் கொடுக்கும் விடயத்தில் மகாத்மா காந்தியுடனும் இந்திய காங்கிரஸ் கட்சியுடனும் மூதறிஞர் ராஜாஜி அவர்கள் கட்சியை விட்டு வெளியேறி பம்பையில் பகிரங்க கூட்டம் கூட்டி அதற்கு விளக்கம் அளித்தார். அது முறையானதும் அரசியல் நாகரிகமும் ஆகும். நாடாளுமன்ற உறுப்பினராக தொடரும் அவாவோடு இப்படியும் சொல்லலாம், செயல்படலாம் என கருதக் கூடாது. இலங்கை அரசியலில் தமிழினத்தின் சார்பாக முக்கியப் வகி பாகம் வகிக்கும் இ.த. கட்சி திரு சுமந்திரனின் போக்கிற்கு விட்டுக் கொண்டு போனால் கட்சி மட்டுமல்ல தமிழினமே தேய்ந்து போகும்.

ஆனந்தசங்கரி அவர்களுக்கு எதிரான தீர்மானத்தை நான் பிரேரித்து அதிகப் பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்படும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை. அதனால் ஆனந்தசங்கரி அவர்களே த வி கூட்டணியின் தலைவராக தொடர்கிறார். இதனாலேயே இ த அ கட்சி முழு எழுச்சி பெற்று இன்றும் உயர்ந்து நிற்கின்றது. ஆனந்தசங்கரி அவர்கள் தவி புலிகள்மீது கொண்டிருந்த கருத்துக்களை விடவும் சுமந்திரன் அவர்கள் மோசமான கருத்துக்களை தற்போது தற்போது கூறியுள்ளார். தமிழினத்தின் சார்பாக இடம்பெற்ற ஆயுதப் போராட்டத்தையும், ஆயுதப்போராட்ட காலப்பகுதியில் தமது கட்சி நடந்து கொண்ட அணுகுமுறை பற்றியும் கொச்சைப்படுத்தி உள்ளார். இவற்றைக் கருத்தில் கொண்டு சுமந்திரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

வரும் தேர்தலில் ஏற்படக்கூடிய பின்னடைவை தவிர்க்கவும் சுமந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை அவசியமாகிறது. முழு தமிழ் உலகும் சுமந்திரனின் செவ்வி தொடர்பில் அதிக விரக்தி அடைந்து உள்ளது என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

நன்றி
இப்படிக்கு

(சூ. சேவியர் குலநாயகம்)

பிரதி:- திரு. இரா. சம்பந்தன், அவர்கள்.
(முன்னாள் த வி கட்சியின் செயலாளர் நாயகமும் த தே கூட்டமைப்புத் தலைவரும்)

 

கடித்தின் மூலப்பிரதி

 

 

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.