மலேசியப் பிரதமர் – வடக்கு முதல்வர் சந்திப்பை தடுக்க கடும் முயற்சி எடுத்த சுமந்திரன்! அண்மையில் மலேசிய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். இதன்போது வடக்கு முதலமைச்சரையும் சந்தித்து உரையாடியிருந்தார். தமிழ் தேசிய கூட்டமைப்பை சந்திக்காமல், வடக்கு முதலமைச்சரை மட்டும் சந்திப்பது முறையான இராஜதந்திர நடைமுறையல்ல, அபிவிருத்திக்கான உதவிகள் தொடர்பான கொள்கை முடிவுகளை தமிழ் தேசிய கூட்டமைப்புடன்தான் எடுக்க வேண்டும், தமிழ் மக்களின் பிரதிநிதிகளாக தமிழ் தேசிய கூட்டமைப்பைத்தான் கருத வேண்டும் என்ற மூன்று விவகாரங்களின் அடிப்படையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமை இந்த சந்திப்பை எதிர்த்தது. முதல்வர்- மலேசிய பிரதமர் சந்திப்பு உறுதியான நிலையில், வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை தொலைபேசி வழியாக தொடர்புகொண்ட கூட்டமைப்பின் பேச்சாளர், இந்த சந்திப்பை தமிழ் தேசிய கூட்டமைப்பு எதிர்க்கிறது என தெரிவித்தார். எனினும், சந்திப்பை தடுக்க தன்னால் முடியாதென்றும், பிரதமர் அலுவலகத்தில் இதை பேசுமாறும் திலக் மாரப்பன பதிலளித்துள்ளார். இதனையடுத்து, பிரதமர் மற்றும் அதிகாரிகளுடன் சுமந்திரன் எம்.பி இது தொடர்பில் கலந்துரையாடினார். பிரதமரின் அறிவுறுத்தலின்பேரில், அலுவலகத்தில் உள்ள (இவர் நிதி ஆலோசகராகவும் உள்ளார்) தமிழ் உயர் அதிகாரியொருவர் வெளிவிவகார அமைச்சின் செயலாளரிடம் இது தொடர்பாக கலந்துரையாடினார். இந்த சந்திப்பை தடுக்க ஏதாவது வழிகள் உள்ளதா என அவர் வினவினார். “வடக்கிற்கு செல்வது, முதலமைச்சரை சந்திப்பது மலேசிய அரசின் நிகழ்ச்சி திட்டம், பிரதமரும் அதை விரும்புகிறார், மலேசியாவிலுள்ள சிவில் சமூகத்தின் விருப்பத்திற்கிணங்க அதை செய்கிறார். இது முறையற்ற சந்திப்பில்லையெனில், எழுத்துமூலம் அறிவித்தல் தாருங்கள். பிரதமருக்கு அறிவிக்கிறோம்“ என மலேசிய அதிகாரிகள் பதிலளித்துள்ளனர். இதனையடுத்து இலங்கை வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் ஒதுங்கி கொண்டுள்ளனர். மலேசிய சுகாதார அமைச்சர் டொக்ரர் சுப்ரமணியம் சதாசிவமே இந்த சந்திப்பு நடைபெற விடாப்பிடியான உறுதியை காட்டியுள்ளார் என தெரிகிறது. மலேசியாவுடனான இராஜதந்திர உறவில் சிக்கலை ஏற்படுத்த கூடாதென்பதற்காக இலங்கை அரசும் ஒரு கட்டத்திற்கு மேல் இதில் தலையீடு செய்யாமல் ஒதுங்கிக் கொண்டு விட்டது.  | 
