யாழ் வலம்புரி: என்னிடம் ஏ.கே.47 இப்போது இருந்தால்…

Screen Shot 2019-08-01 at 9.53.51 AM

என்னிடம் ஏ.கே.47 இப்போது இருந்தால்…
2019-07-31 12:27:59

இரண்டாம் தவணைப் பரீட்சைகள் முடிவுற்று விட்டன.

பாடசாலைக்கு வருகின்ற மாணவர்களுக்கு கற்றல் செயற்பாட்டை வழங்குவது ஆசிரியரின் கடமை என்ற அடிப்படையில் மாணவர்களே நான் தருகின்ற விடயத்தில் ஒரு கட்டுரை எழுதுங்கள் என்றேன்.

மாணவர்கள் ஆவலோடு சேர் என்ன கட்டுரை என்று கேட்டனர்.

என்னிடம் இப்போது இருந்தால்… என்று கற்பனைக் கட்டுரை எழுதுங்கள் என்று கூறினேன்.

அவ்வளவுதான் மாணவர்கள் ஆர்வத்தோடு கட்டுரை எழுதத் தொடங்கி 30 நிமிடங் களுக்குள் பூர்த்தியாக்கினர்.

மாணவர்களிடம் இருந்து குறித்த கட்டுரைகளை வாங்கும்போது அவர்கள் இட்ட தலைப் புக்களை அவதானித்தேன்.

என்னிடம் விமானம் இப்போது இருந்தால் என்று ஒரு மாணவன் எழுதியிருந்தான்.
என்னிடம் நாட்டை ஆளும் அதிகாரம் இப்போது இருந்தால் என்பது இன்னொரு மாணவனின் கட்டுரை.

மற்றொரு மாணவன் இட்டிருந்த தலைப்பு என்னைத் திகைக்க வைத்தது. என்னிடம் ஏ.கே.47 இப்போது இருந்தால் என்பதுதான் அவன் இட்ட தலைப்பு.

தலைப்புத் தந்த ஆச்சரியத்தோடு அந்த மாணவன் எழுதிய கட்டுரையை வாசித்தேன்.
என்னிடம் ஏ.கே.47 இப்போது இருந்தால் அதனைப் பெறுமதியாகப் பயன்படுத்துவேன்.

அதன்மூலம் எங்கள் மக்கள் நிம்மதியான வாழ்வு வாழ முடியும்.
இதை நான் எழுதும்போது ஏ.கே.47 ஆயு தத்தால் எப்படி நிம்மதியான வாழ்வை உருவாக்க முடியும் என்று இதைப் படித்துப் பார்க்கின்ற என் ஆசிரியர் தனக்குள் கேள்வி எழுப்பலாம்.

அந்தக் கேள்விக்கான பதிலையும் நான் தந்தாக வேண்டும்.
இன்று ஈழத் தமிழ் மக்கள் நாதியற்று இருப்பதற்குக் காரணமே நான் கூறிய ஏ.கே.47 எங்களிடம் இல்லாததுதான்.

அது இருந்திருந்தால்; தமிழ் அரசியல்வாதிகள் என்னிடம் வந்து, வரவு செலவுத் திட்டத் துக்கு ஆதரவு வழங்கலாமா? நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்க முடியுமா? நீங் கள் சொல்வதன்படி நாங்கள் செய்கிறோம் என்று கைகட்டி நின்றிருப்பர்.

என்ன செய்வது அந்த 47 இல்லாததால், தங்களுக்கு வாக்களித்த தமிழ் மக்கள் பற்றி இம்மியும் சிந்திக்காமல் தங்கள் பாட்டில் எங்கள் அரசியல்வாதிகள் நடக்கின்றனர்.

தவிர, கன்னியா வெந்நீரூற்றுப் பகுதியில் பிள்ளையார் ஆலயத்தை உடைத்து விகாரை கட்டுகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டவர்களுக்கு ஒரு கடிதம் எழுதுவேன்.

இருந்தபடி இருக்க விடுங்கள். இல்லையாயின் உங்கள் காயத்தை மாற்ற வேண்டி வரும் என்று அந்தக் கடிதத்தில் எழுதியிருப்பேன்.

அவ்வளவு தான் எல்லாம் சரியாக நடக்கும். இவற்றுக்கு மேலாக, இன்னும் சிலருக்கு ஏ.கே.47 பதிலளிக்கும்.

அதில் நுண்கடன் வழங்கிவிட்டு பாலியல் இலஞ்சம் கேட்பவர்கள் முன்னுரிமை பெறுவர் என்று அந்த மாணவனின் கட்டுரை இருந்தது.

கட்டுரையைப் பார்த்து விறுவிறுத்துப் போன நான் அதனைக் கிழித்துக் குப்பைக்கூடையில் போட்டுவிட்டு ஏதும் நடக்காதது போல இருந்து கொண்டேன்.

About Tamil Diaspora News.com 461 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.