ரணிலுக்கு நடந்ததுதான் சுமந்திரனிற்குமாம்:தினேஷ் குணவர்த்தனசுமந்திரனின் ஏக்கிய ராஜ்ஜிய விவகாரமும் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியதும் “இலங்கை அரசியலமைப்புடன் தொடர்புடைய ஒரு விடயம் நீதிமன்றத்திற்கு சென்றால், சிங்கள மொழியில் குறிப்பிடப்பட்டுள்ள வியாக்கியானங்களே இறுதியில் கவனத்தில் கொள்ளப்படும். ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கியதில் அரசியலமைப்பை எந்த இடத்திலும் ஜனாதிபதி மீறவில்லை. யாருக்காவது சந்தேகமிருந்தால் சிங்களத்தில் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவற்றை நன்றாக படித்துப்பாருங்கள்“ இவ்வாறு தெரிவித்துள்ளனர் பொதுஜன ஐக்கிய முன்னணியின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள். பிரதமரின் செயலாளரின் அலுவலகத்தில் இன்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே இதனை தெரிவித்தனர். தற்போதைய அரசியல் மாற்றங்கள் அரசியலமைப்பிற்கு உட்பட்டே நடக்கிறதென பொதுஜன ஐக்கிய முன்னணியின் தலைவர்கள் வலியுறுத்தினர். அரசியலமைப்பின் ஆங்கில மொழிபெயர்ப்பை படிக்கும்போது வெளிநாட்டிலுள்ளவர்களிற்கு சில குழப்பங்கள் வரலாம். ஆனால் சிங்களத்தில் மிக தெளிவாக கூறப்பட்டவற்றின் அடிப்படையிலேயே ஜனாதிபதி செயற்பட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி சுமந்திரனின் ஏக்கிய ராஜ்ஜிய விவகாரமும் நீதிமன்றத்திற்கு வந்தால் இதுதான் நடக்கும். அதைத்தான் டக்ளஸ் எம்.பி வழிநடத்தல்குழு கூட்டங்களில் குறிப்பிட்டார்“ என தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டார். |
Be the first to comment