தெளிவான நிலையில் சிங்களத் தலைவர்கள், குழம்பிய நிலையில் தமிழ் தலைவர்கள்! – விக்னேஸ்வரன்

Man of the year Final

நாம் பலமுடையவர்களாக மாறுவது எப்படி? முதலில் நாங்கள் பிச்சை கேட்பதை நிறுத்த வேண்டும். அடுத்தது நாங்கள் உண்மையின் வழி நிற்கின்றோம் என்ற எண்ணம் எம்முள் பிறக்க வேண்டும். நாம் எம்மை நாமே ஆண்ட மக்கள்.

சிங்கள அரசியல் தலைவர்கள் தமக்கு என்ன வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாகவும் திடமாகவும் உள்ளானர். நாங்கள் எமக்குள் தெளிவு இன்றி நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் பற்றிய சிந்தனையின்றி காற்றினால் கொண்டு செல்லப்படும் கடதாசி போல் நடந்து வருகின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

சிங்கள அரசியல் தலைவர்கள் தமக்கு என்ன வேண்டும் என்பதில் மிகவும் தெளிவாகவும் திடமாகவும் உள்ளானர். நாங்கள் எமக்குள் தெளிவு இன்றி நடைமுறைப்படுத்த வேண்டிய வழிமுறைகள் பற்றிய சிந்தனையின்றி காற்றினால் கொண்டு செல்லப்படும் கடதாசி போல் நடந்து வருகின்றோம் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

போருக்கு பின்னரான சூழலில் தமிழ் மக்கள் இருப்பதையும் இழந்து கொண்டிருக்கிறார்கள், ஆனால் இந்த விடயம் தொடர்பாக தமிழ் அரசியல் தலைவர்கள் தொடர்ச்சியான மௌனத்தையே சாதிக்கிறார்கள் என மக்கள் மத்தியிலிருந்து எழும் கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போதே முதலமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் அவர் கருத்து வெளியிடுகையில், ‘இப்பொழுதும் எம்முள் பலர் கேட்பது, ஏன் அரசாங்கத்துடன் சேர்ந்து பொருளாதார நன்மைகளைப் பெற பின்னிற்கின்றீர்கள் என்பதையே, இத்தருணத்தில் நான் உச்ச நீதிமன்றத்தில் கூறியதையே ஞாபகப்படுத்த வேண்டியுள்ளது, இது எப்படி இருக்கின்றது என்றால் நாம் கனிஷ்ட மாணவர்களாகக் கல்லூரியில் மாபிள்கள் விளையாடிக் கொண்டிருந்த போது எம் சிரேஷ்ட மாணவர்கள் வந்து அத்தனை மாபிள்களையும் அடித்துப்பறித்து தாம் கையகப்படுத்தி விடுவார்கள்.

நாங்கள் அழுது புலம்ப, ஆசிரியர்களுக்குத் தெரியவரப் போகின்றதென்று கையகப்படுத்திய 25 மாபிள்களை தாமே வைத்துக் கொண்டு 6 அல்லது 7 அல்லது 8 தருவதாகப் பேரம் பேசுவார்கள். நாம் பத்தைக் கேட்டால் உடனே தந்துவிட்டுப் போய்விடுவார்கள். ஆனால் 15 ஐ தாம் எடுத்துச் சென்று விடுவார்கள். அதேபோல் பொருளாதார நன்மைகளைத் தந்து எம்மை ஆறுதல்ப்படுத்துவது எமது முக்கியமான உரிமைகளைத் தாம் வைத்திருப்பதற்கே. நாம் பொருளாதார விருத்திகளைத் தந்துவிட்டோம் என்று கூறி எமது வரலாற்றுப் பிறப்புரிமைகளை அவர்கள் கைவசம் வைத்திருப்பதற்கே.

ஆகவே முழுமையான ஒரு பரந்த சிந்தனையுடன் எங்களைச் சுற்றி நடப்பதை நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். பொருளாதார நன்மைகள் முக்கியம் தான். ஆனால் அவற்றை நாம் எமது புலம்பெயர்ந்தோர் ஊடாகவும் பெறலாம். சர்வதேச உதவிகளுடாகவும் பெறலாம்.

அரசாங்கத்திடம் பிச்சைகேட்டு எடுத்தோமானால் சதா காலமும் பிச்சைக்காரர்களாகவே இருக்க வேண்டும். அரசாங்கம் தாமாகக் கொடுப்பது வேறு நாம் திருவோடு ஏந்தும் நிலை வேறு. அவர்களிடம் தஞ்சம் புகுந்தவுடன் நடப்பது என்ன? தமக்கு வேண்டியவற்றை அவர்கள் சாதித்துக் கொள்வார்கள். காணிகளைக் கேட்பர், அவர்கள் இங்கு வந்து தொழில் செய்யக் கேட்பர், இராணுவம் தொடர்ந்திருக்கக் கேட்பர், நாங்கள் அவர்களிடம் எடுத்திருப்பதால் முடியாது என்று கூறமுடியாது.

மேலும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுடன் வருவர். வந்து ஜம்புகஸ்பட்டுணவைக் காட்டி இது எமது சிங்கள நாட்டின் ஒரு பகுதி, தமிழர்கள் இங்கு 10 ஆம் நூற்றாண்டில் வந்து எம்மைத் துரத்திவிட்டு இப்பொழுது இங்கு குடியிருந்து கொண்டு எம்மையே எதிர்க்கப்பார்க்கின்றார்கள் என்று கூறுவர். அப்பொழுது அதற்கு மறுப்புத் தெரிவிக்கக்கூடிய நிலையில் நாங்கள் இருக்க மாட்டோம். எமது தனித்துவத்தை இழந்து விட்டிருப்போம். பிச்சைபோட்டு வளர்க்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஒரு கேவலமான இனமாக சர்வதேசத்தால் அடையாளப்படுத்தப்படுவோம்.

இருப்பதை நாம் இழந்து வருவதற்குக் காரணம் எமது பாரம்பரியம், வரலாறு, எமது இலக்கியம், இன்றைய சுற்றுச் சூழல் எதனையுமே அறியாது அரசியல் நடத்துவதேயாகும். பலமுள்ளவன் தான் விட்டுக் கொடுக்க வேண்டும். பலமற்றவன் விட்டுக்கொடுத்தால் அது பேடித்தனம். பயந்து விட்டுக்கொடுப்பதாகவே இருக்கும்.

பலமுள்ளவன் உடனே உங்கள் பலமற்ற நிலையைப் புரிந்து கொள்வான். இப்போது எமது அரசாங்கங்கள் எமது பலமற்ற நிலையை நன்றாக அறிந்து கொண்டிருக்கின்றன. எம்மை வாங்கிவிட முடியும் என்று நினைக்கின்றன. நாமும் அதற்கேற்றவாறே நடந்து வருகின்றோம். நாங்கள் பலமுள்ளவர்களாக மாறினால் தான் எங்களிடமிருந்து பறிப்பதை மற்றவர்கள் நிறுத்துவார்கள்.

நாம் பலமுடையவர்களாக மாறுவது எப்படி? முதலில் நாங்கள் பிச்சை கேட்பதை நிறுத்த வேண்டும். அடுத்தது நாங்கள் உண்மையின் வழி நிற்கின்றோம் என்ற எண்ணம் எம்முள் பிறக்க வேண்டும். நாம் எம்மை நாமே ஆண்ட மக்கள். இன்று ஆங்கிலேயர் தயவால் அதிகாரங்களைத் தமதாக்கி எம்மைப் பெரும்பான்மையினர் ஆளப்பார்ப்பது எமது உண்மை நிலையை மறைப்பதாகும், கொச்சைப்படுத்துவதாகும்.

ஆகவே தமிழ் மக்கள் தமது உரித்துக்களைப் பெறப் போராடுவது நியாயமானது என்பதில் நாங்கள் அசைவற்ற நம்பிக்கை கொள்ள வேண்டும். நாம் சிங்கள மக்களின் உரித்துக்களைப் பறிக்கப் போராடவில்லை. அவர்கள் மீது எமக்கு எவ்விதக் கோபமோ குரோதமோ இல்லை. அவர்களின் அரசியல்வாதிகள் மீது எமக்குப் பரிதாபம் இருக்கின்றது. கேவலம் பதவிக்குவர இந்த அருமருந்தன்ன நாட்டைக் குட்டிச்சுவர் ஆக்கி விட்டார்கள் என்ற மனவருத்தம் எமக்குண்டு.

எமது உரித்துக்களை அவர்கள்தான் கையகப்படுத்தியுள்ளார்கள் என்ற உண்மையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அடுத்து நாம் பலமற்றவர்கள் என்று நினைப்பதைக் கைவிட வேண்டும். நாம் பலமுடையவர்கள். உலகம் பூராகவும் எம்மவர்கள் சீரும் சிறப்புடனும் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதை மறக்கக் கூடாது. உண்மையில் சிறுபான்மையினர் மனோநிலையில்த் தான் சிங்கள மக்கட் தலைவர்கள் இவ்வாறு நடந்து கொள்கின்றார்கள் என்பதை நாம் எமது மனதில் பதிய வைக்க வேண்டும்.

நாங்கள் உண்மைக்குப் போராடுகின்றோம், எம் மக்கள் நன்மைக்குப் போராடுகின்றோம், நியாயத்திற்குப் போராடுகின்றோம் என்ற திட நம்பிக்கை வந்துவிட்டால் நாங்கள் பலமுள்ளவர்களாக மாறுவோம். அவ்வாறான சிந்தனையில் நாம் இல்லாதபடியால்த்தான் மற்றவர்கள் பெருந்தன்மையை நாங்கள் எதிர்பார்த்து நிற்க வேண்டியுள்ளது. அதன்போது இருப்பவற்றையும் நாம் இழந்து வருகின்றோம். நிலங்கள் பறி போகின்றன. அதிகாரங்கள் பறிபோகின்றன. தரவேண்டியவை தராமல் தாமதப்படுத்தப்பட்டு வருகின்றன எனவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

About Tamil Diaspora News.com 432 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.