தமிழ் பிராமணர்களே சிங்கள முனிகளாயினர்?

vigneswaran-326x245

தமிழ் பிராமணர்களே சிங்கள முனிகளாயினர்?

எமது கலை கலாச்சாரங்கள் எம்மால் பேணப்படாவிட்டால் நாம் வேற்றுக் கலாச்சாரங்களை ஏற்கத் தலைப்பட்டு விடுவோமென வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். கற்சிலைமடு, முல்லைத்தீவு பண்டார வன்னியன் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற வடமாகாண பண்பாட்டு பெருவிழாவில் உரையாற்றிய அவர் மலையகத்தில் இருந்து வத்தளை போன்ற இடங்களுக்குக் குடிபெயர்ந்த சிலர் தமது பெயர்களை மாற்றவும் மதத்தை மாற்றவும் தலைப்பட்டு விட்டார்கள்.

இவ்வாறு கலைகள் மாறிய, கலாச்சாரங்கள் மாறிய பலர் இந்நாட்டில்; இன்று வாழ்கின்றார்கள். சுமார் ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன்னர் டொன் ஜூவான் தர்மபால என்ற அரசனுக்கு முடி சூட்ட அதாவது முடிசூட்டலின் போது எடுக்க வேண்டிய மத ரீதியான பூஜைகள், புனஸ்காரங்களை நடத்தக் கூடிய பிராமணர்கள் இங்கு கிடைக்காமல் இருந்தது. அதனால் இவ்வாறு பூஜைகள் நடத்தும் முனிகள் என்ற பிரிவினுள் அடங்கிய தமிழ்ப் பிராமணர்கள் மதுரையில் இருந்து வரவழைக்கப்பட்டார்கள். அந்தக் காலத்தில் மதுரையில் இருந்து கொழும்புக் கோட்டை நோக்கி வருவதென்றால் மாதக் கணக்காகும். ஒரு வருடகாலம் கூட எடுக்கும். இவ்வாறான பிரயாணத்தை முதியவர்கள் ஏற்க முடியாதிருந்ததால் பாண்டித்தியம் பெற்ற இளம் முனிமார் வரவழைக்கப்பட்டார்கள். முடிசூட்டும் விழா இனிதே முடிந்த பின் மதுரையில் இருந்து வந்த அந்தத் தமிழ் இளைஞர்களுக்கு அரசன் ஓர் வேண்கோள் விடுத்தான். “எமது பெண்களை மணந்து இங்கேயே இருங்கள். உங்களுக்கு பல ஏக்கர் காணிகளை நான் வழங்குகின்றேன். தேவையான போது மதுரை சென்று இருந்து விட்டு வாருங்கள். நான் அதற்கு உதவி செய்கின்றேன்” என்றார். பலர் இதற்கு இசைந்தார்கள். இன்று தமது பெயர்களுடன் “முனி” என்ற பின்னொட்டைக் கொண்ட சிங்கள மக்கள் இந்த முனிமாரின் வாரிசுகளே. நம்முனி, வெற்றிமுனி, விஜிதமுனி, விஜயமுனி என்ற பல முனிப் பெயர்களுடன் அவர்கள் தாம் சிங்களவர்கள் என்ற முறையில் வலம் வருகின்றார்கள். அவர்களின் முனிக் கலாசாரம் சிங்கள கலாசாரத்துடன் இரண்டறக்கலந்து விட்டது. இன்று அவர்கள் தம்மைச் சிங்களவர்கள் என்றே அடையாளப்படுத்துகின்றார்கள். ஆனால் கொயிகம என்ற உயர் மட்ட சிங்கள மக்கள் இவர்களைத் தம்முடன் சேர்க்கவில்லை. அவர்களுக்கு என்று ஒரு சாதிப் பெயர் கொடுத்து சமூகத்தில் தமக்குப் பதிவான ஒரு இடத்தையே வழங்கியுள்ளார்கள்.

இன்று வட கிழக்கை இணைக்க மறுத்து இடையில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெற்று வருகின்றன. முன்னம் வலிஓயா இப்போது கியூல் ஓயா என்று வடகிழக்கு மாகாணங்களுக்கு இடைப்பட்ட இதுகாறும் தமிழ்ப் பெயர்களைக் கொண்டிருந்த நிலங்கள் பெயர்மாறி வருகின்றன. காலக்கிரமத்தில் அவர்களின் கலை, கலாச்சாரங்கள் எம்மவரின் வாழ்க்கையில் உள்நுழைவன. எமது தனித்துவம் பறி போய்விடுவன. இதனால்த்தான் முல்லைத்தீவு, வவுனியாக் காணிகள் பறி போவதை நாம் எதிர்த்து வருகின்றோம். எமது சுற்றாடல்களைப் பாதுகாப்பதும் எமது கலாச்சாரத்தின் ஒரு அங்கமே. ஆகவே மக்களுக்குத் தம் பாரம்பரியம் பற்றி எடுத்துச் செல்லும் இவ்வாறான பண்பாட்டு பெரு விழாக்கள் அத்தியாவசியம் என்பதை உணர்ந்து கொண்டிருப்ப|Pர்களெனவும் நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

About Tamil Diaspora News.com 461 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.