தமிழர் தேசத்தை இந்தியா அங்கீகரிக்க வேண்டும் : கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

3வது திருத்தம் அரசியல் தீர்வுக்கான தொடக்கப் புள்ளியல்ல என்றும், தமிழர் தேசத்தை அங்கீகரித்து தனது கடப்பாட்டை இந்தியா நிறைவேற்ற வேண்டும் என்றும், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரான, கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இந்தக் கோரிக்கையை இந்தியாவிடம் விடுத்துள்ளார்.

“தமிழ் மக்களின் தேசியப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதே இந்திய – இலங்கை உடன்படிக்கையின் முக்கிய நோக்கமாக இருந்தது.தமிழ் மக்களை, ஒரு தரப்பாக இணைத்துக் கொள்ளப்படாதது இந்த உடன்படிக்கையின் மாபெரும் குறைபாடாகும்.

தமிழ் மக்களை ஒரு தரப்பாக ஏற்றுக் கொள்ளாமல் தவிர்க்கப்பட்டதால், தமிழ் மக்களின் சார்பில் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்ட இந்தியாவுக்கு இந்த உடன்படிக்கை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் கடப்பாடு உள்ளது.

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் ஓர் ஆரம்பப்புள்ளியாகக் கூட அமையவில்லை என்பதால், நாம் 13வது திருத்தச் சட்டத்தை நிராகரிக்கிறோம். இந்திய – இலங்கை உடன்படிக்கையும் 13ஆவது திருத்தச் சட்டமும் முற்றிலும் வேறுவேறானவை.

13வது திருத்தச் சட்டத்தை நாங்கள் நிராகரிக்கிறோமே தவிர இலங்கை – இந்திய உடன்படிக்கையை நிராகரிக்கவில்லை.

இந்த உடன்படிக்கையின் சரத்துக்களின்படி தமிழர் தேசத்தை அங்கீகரித்து அந்த ஒப்பந்தத்தை முழுமையாக நிறைவேற்றி, அதனடிப்படையில் இந்தத் தீவில் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளும் நிலைத்து நிற்கக் கூடிய அரசியல் தீர்வை எட்டுவதற்கு, இந்தியா பொறுப்புக்கூறும் கடப்பாடு உடையது என்பதை வலியுறுத்துகிறோம்” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.