சுமந்திரனுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் பகிரங்க சவால் !! பதில் என்ன ?

tna-tgte

சுமந்திரன் அவர்களே! தமிழீழ இலட்சியத்தைக் கைவிடும் ஆணை உங்களுக்கோ அல்லது வேறு எந்தத் தமிழ்த் தலைவர்களுக்கோ கிடையாது: வி.உருத்திரகுமாரன்

TORONTO, CANADA, January 20, 2018 /EINPresswire.com/ —

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன் அவர்களுக்க பகிரங்க சவால் ஒன்றிறை விடுத்துள்ளார்.

சிங்கள மக்களை திருப்பித்திப்படுத்தும் நோக்கில் தமிழீழக் கோரிக்கையினை தமிழ்மக்கள் கைவிட்டுவிட்டார்கள் என எம். ஏ. சுமந்திரன் அவர்களை மையப்படுத்தி செய்திகள் வெளிவந்திருந்தன.

இந்நிலையில் கனடாவில் இடம்பெற்று வருகின்ற நா..தமிழீழ அரசாங்கத்தின் நேரடி அரசவை அமர்வில் இவ்விவகாரம் தொடர்பில் பகிரங்க சவால் ஒன்றை பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் சுமந்திரன் அவர்களே! தமிழீழ இலட்சியத்தைக் கைவிடும் ஆணை உங்களுக்கோ அல்லது வேறு எந்தத் தமிழ்த் தலைவர்களுக்கோ கிடையாது. முடிந்தால் நீங்கள் நல்லுறுவு கொண்டிருக்கும் சிறிலங்கா அரசுடன் பேசி, 6வது திருத்தச் சட்டத்தை நீக்கி விட்டு மக்கள் முன்னால் வந்து ஆணை கேளுங்கள். நீங்கள் தமிழீழத் தனியரசுக்கு எதிரான பக்கம் நில்லுங்கள். நாம் தமிழீழ அரசுக்கு ஆதரவான பக்கம் நிற்கிறோம். மக்கள் தீர்ப்பு வழங்கட்டும். அப்போது மக்கள் உங்களுக்குச் சார்பான தீர்ப்பு வழங்கினால் அதன் பிறகு தமிழீழ தனியரசு நிலைப்பாட்டைக் கைவிட்டதாகப் பேசுங்கள். அதுவரை சற்று அமைதியாக இருங்கள் எனத் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் ஈழத்தமிழ் மக்களின் அரசியல் செயல்வழிப்பாதை குறித்தும், சமகால அரசியல் தட்பவெப்பம் குறித்தும் குறித்துரைத்திருந்த பிரதமர் வி.உருத்திரகுமாரன் உரையின் முக்கிய பகுதிகள் :

நான் எனது புத்தாண்டுச் செய்தியில் குறிப்பிட்டவாறு தமிழ் மக்களின் அரசியற்தலைவிதி தமிழ் மக்களால் தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்க வேண்டும். அதற்கேற்ற வகையில் எமது செயற்பாடுகளை நாம் ஒழுங்கமைக்க வேண்டும்.

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களை ஒரு வலுமையமாகத் திரட்டி அந்த வலுமையத்தின் பலத்தில் தங்கி நின்று உலக நாடுகளுடன் எமது நலன் சார்ந்து உரையாடும் பலத்தை நாம் பெற வேண்டும். அரசற்ற ஒரு தேசம் என்ற வகையில் தமிழ் மக்கள் தாமாக அணிதிரண்டு அரசுகளை எதிர்கொண்டு செயற்படக் கூடியதொரு வலுவைப் பெறம் வகையில் மக்கள் அணியாக உருத்திரள வேண்டும்.

இந்தத் தொலைநோக்கை அடிப்படையாகக் கொண்டே நாம் எமது செயற்பாடுகளைக் கட்டியமைக்க வேண்டியவர்களாக உள்ளோம். கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைவானேன்? என்று நம் மூத்தோர்கள் காட்டிய வழிமுறையொன்று நம்முன்னே உண்டு. வெண்ணெய்யை உருக்கி நெய்யைப் பெறும்போது முயற்சியின் ஊடாக ஒரு உருமாற்றம் நிகழ்கிறது.

இதேபோல் நாம் எமது முயற்சியின் ஊடாக உலகத்தமிழ் மக்கள் என்ற மக்கள் பலத்தை அனைத்துலகில் அரசியற் பொருளாதார சக்தியாக உருமாற்றம் செய்ய வேண்டும். நாம் எடுத்துக் கொண்ட உதாரணத்தில் உருமாற்றம் இலகுவானது. நாம் இப்போது பேசும் அரசியல் உருமாற்றம் கடினமானது. மிகுந்த முயற்சியிiனை வேண்டி நிற்பது. இருந்த போதும் நாம் அதனைச் செய்தாக வேண்டும்.

எந்தவொரு மக்கள் கூட்டமும் தனது அரசியற் பெருவிருப்பை சுதந்திரமாக வெளிப்படுத்தவும், இப் பெருவிருப்புகளை அடைந்து கொள்வதற்காகச் செயற்படுவதும் அடிப்படை மனித சுதந்திரத்தின் பாற்பட்டது. இந்த மனித சுதந்திரத்துக்கு தமிழீழ மக்கள் உரித்துடையவர்கள். ஆனால் சிறிலங்காவின் சிங்கள பௌத்த இனவாத அரசு தனது அரசியற் சட்டங்கள் ஊடாகவும் இராணுவ ஆக்கிரிமிப்பின் ஊடாகவும் இந்த அடிப்படை மனித சுதந்திரத்தை ஈழத் தமிழ் மக்களிடம் இருந்து பறித்தெடுத்திருக்கிறது. சிறிலங்கா அரசியலமைப்பின் ஆறாவது திருத்துச் சட்டம் மக்களின் கருத்துரிமைக்கு எதிரானது. தமிழ் மக்களின் தேசிய இனப்பிரிச்சினைக்கு சுதந்திரமும் இறைமையும் உடைய சுதந்திரத் தமிழீழ அரசுதான் தீர்வாக அமையும் என்று சொல்வதற்கும் செயற்படுவதற்கும் உள்ள உரிமையை 6வது திருத்தச் சட்டம் மறுதலிக்கிறது.

நாம் அதனை எதிர்கிறோம். எமது மக்களின் தீர்மானிக்கும் உரிமையினை சிறிலங்கா அரசோ அல்லது சிங்கள தேசமோ தீர்மானிக்க முடியாது. இதனால் அரசியலமைப்புpன் இந்தப் பிரிவை நீக்குமாறு நாம் குரல் கொடுக்கிறோம். 6வது திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்த பின்னர் நடைபெற்ற தேர்தல்கள் எவையும் தமிழீழத் தனியரசு குறித்த மக்கள் விருப்பினை வெளிப்படுத்தமொன்றாகக் கொள்ள முடியாது. இதனை இன்னொரு வகையில் கூறுவதாயின் 6வது திருத்தச் சட்டம் அமுலில் இருக்கும்வரை தமிழீழத் தனியரசு அமைக்கும் விருப்பினை மக்கள் கைவிட்டு விட்டார்கள் என்று எவரும் கூமுடியாது. இவ்வாறு கூறும் உரித்தோ ஆணையோ தற்போதய தமிழ்த் தலைவர்கள் எவருக்கும் கிடையாது. 1977 ஆம் ஆண்டில் தமிழீழம் குறித்த மக்கள் வாக்கெடுப்பு எனக்கூறி நடாத்தப்பட்ட தேர்தலில் மக்கள் வழங்கிய ஆணையும், போர்க்களத்தில் 50;,000 க்கும் மேற்பட்ட போராளிகள் குருதி சிந்தி வழங்கிய உயிர்க்கொடையும் தமிழீழம் என்ற இலட்சியத்துக்கு ஆதாரமாக இருக்கிறது.

அண்மையில் வந்த பத்திரிகைச் செய்தியொன்றில் பெரும்பான்மைச் சமூகத்தைத் திருப்திப்படுத்தவதற்காக தனிநாட்டுக் கோரிக்கையினை கைவிட்டு விட்டாம் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் கூறியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. இச் செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் நாம் சுமந்திரன் அவர்களுக்கு ஓரு செய்தியைச் சொல்லி வைக்க விரும்புகிறோம்.

சுமந்திரன் அவர்களே! தமிழீழ இலட்சியத்தைக் கைவிடும் ஆணை உங்களுக்கோ அல்லது வேறு எந்தத் தமிழ்த் தலைவர்களுக்கோ கிடையாது. முடிந்தால் நீங்கள் நல்லுறுவு கொண்டிருக்கும் சிறிலங்கா அரசுடன் பேசி, 6வது திருத்தச் சட்டத்தை நீக்கி விட்டு மக்கள் முன்னால் வந்து ஆணை கேளுங்கள். நீங்கள் தமிழீழத் தனியரசுக்கு எதிரான பக்கம் நில்லுங்கள். நாம் தமிழீழ அரசுக்கு ஆதரவான பக்கம் நிற்கிறோம். மக்கள் தீர்ப்பு வழங்கட்டும். அப்போது மக்கள் உங்களுக்குச் சார்பான தீர்ப்பு வழங்கினால் அதன் பிறகு தமிழீழ தனியரசு நிலைப்பாட்டைக் கைவிட்டதாகப் பேசுங்கள். அதுவரை சற்று அமைதியாக இருங்கள்.

நண்பர்களே!

எமது தலைவிதியை நாமே தீர்மானிக்கும் உரிமைக்காக நாம் முனைப்பாகக் குரல் கொடுக்க வேண்டியவர்களாக உள்ளோம். தமிழ் மக்களின் தேசியப்பிரச்சினைக்கான எந்தவொரு அரசியற்தீர்வும் தமிழ் மக்களால் தீர்மானிக்கப்படுதல் முக்கியமானது. இது தமிழீழ மக்கள் ஒரு தேசம் என்ற நிலைப்பாட்டின்பாற்பட்ட அடிப்படையான உரிமையாகும். தமிழீழ மக்களது தேசிய இனப்பிரச்சினைக்கான எத்தகைய தீர்வும் இனப்படுகொலையிலிருந்த தமிழர் தேசத்தைப் பாதுகாக்கக்கூடியவகையில், தமிழ் மக்களுக்கான ஈடுசெய்நீதியின் அடிப்படையில் எட்டப்பட வேண்டும் என்பது மிகவும் முக்கியமானதாகும். முள்ளிவாய்க்கால் தமிழின அழிப்பு தமிழீழ மக்களுக்கு ஈடுசெய்நீதியின் அடிப்படையிலான அரசியற்தீர்வு அவசியம் என்பதனை வலியுறுத்துகிறது.

தமிழ் மக்களின் அரசியற் தலைவிதியைத் தமிழ் மக்களே தீர்மானிக்கும் வகையில் தமிழீழத் தனியரசு உள்ளடங்கலான அரசியற்தீர்வு குறித்து தாயகத்திலும், ஈழத் தமிழ் மக்கள் புலம் பெயர்ந்து வாழும் நாடுகளிலும் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையினை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்; முனைப்பாக முன்னெடுக்கவுள்ளது. இதற்காக «தமிழர் தலைவிதி தமிழர் கையில்! – பொதுவாக்கெடுப்புக்கான மக்கள் இயக்கம்» எனும் மக்கள் அமைப்பை உருவாக்கியுள்ளோம். இம் மக்கள் அமைப்பின் செயற்பாடுகளை வலுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகள் குறித்தும் நாம் இம் அமர்வில் விவாதிக்கவுள்ளோம்.

மேலும், இம் அமர்வு தமிழர் தாயகப்பிரதேசத்தில் பெப்ரவரி 10ஆம் நாள் நடைபெறவுள்ள உள்ளுராட்சித் தேர்தல் தொடர்பாகவும் சிறிலங்காவின் புதிய அரசியல் யாப்பு உருவாக்க முயற்சியின் பாற்பட்ட வெளிவந்த இடைக்கால அறிக்கை குறித்தும் விவாதிக்கவுள்ளது. தமிழ் மக்களின் உரிமைப்போராட்டத்தில் இவை ஏற்படுத்தககூடிய தாக்கம் என்னவாக இருக்கும் என்பதே எமது உரையாடலின் அடிப்படைக் கருப்பொருளாக இருக்கும். இவற்றைப் பற்றிப் பேசாது புறக்கணிப்பதனை விட, இவற்றைப் பேசி, விவாதித்து இவற்றைக் கடந்து போகும் வகையிலான ஓர் அரசியற்;திட்டத்தை நாம் வகுத்தக் கொள்ளுதல் அவசியமானதாகும்.

எமது அரசியற்தலைவிதியை நாமே தீர்மானிக்கும் ஒரு பொறிமுறையினை நாம் உருவாக்கியே தீர வேண்டும் என்ற உறுதிப்பாட்டோடு நாம் இம் அமர்வில் செயற்படுவோமாக!

இவ்வாறு பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது உரையின் முக்கிய பகுதிகள் அமைந்திருந்தன.

நாதம் ஊடகசேவை

Contact: pmo@tgte.org

Transnational Govertnment of Tamil Eelam (TGTE)
TGTE
+1-212- 290-2925

About Tamil Diaspora News.com 524 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.