கோத்தபாய கடற்படை தளத்திற்கு சுவீகரிப்பு ஆரம்பம்!

முல்லைத்தீவு – வட்டுவாகல் கோத்தபாய கடற்படை  தளத்திற்கான காணி சுவீகரிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் க.விமலநாதன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் சிலர் காணிகளை அரசிற்கு வழங்குவதற்கு முன்வந்துள்ள நிலையிலும் பலர் காணிகளை வழங்க விரும்பமின்மையினையும் எதிர்ப்பினையும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

வட்டுவாகல் கடற்படைத்தளத்திற்காக 671 ஏக்கர் காணி கையகப்படுத்தக் கோரப்பட்டுள்ளது. இதில் 292 ஏக்கர் அரச காணிகளாகக் காணப்பட்டுள்ள போதும் ஏனைய 379 ஏக்கர் தனியார் நிலமாக காணப்படுகின்றது.

இவ்வாறு 35 பேருக்குச் சொந்தமான 379 ஏக்கர் காணியில் சிலர் காணி சுவீகரிப்பிற்கு மாற்றுக்காணி அல்லது இழப்பீட்டினை பெற்றுக்கொள்ள முன்வந்துள்ளார்கள், பலர் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

2014 ஆம் ஆண்டு வட்டுவாகல் கடற்படை தளத்தின் காணி சுவீகரிப்பு வர்த்தமானி அறிவித்தலின் படி தொடங்கப்பட்ட சுவீகரிப்பு நடவடிக்கை பிரிவு 5 சட்டத்தின் கீழ் நில அளவீடு முன்னெடுக்கப்பட்ட போதும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள்.

காணி உரிமையாளர்கள் 23 பேர் இவ்வாறு காணியினை வழங்க விருப்பம் இல்லாத நிலையில் கடந்த காலங்களில் எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளார்கள். இருந்தும் காணியினை சுவீகரிக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

About Tamil Diaspora News.com 461 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்