கிழக்கு விடயத்தில் மைத்திரியிடம் தோற்றதா தமிழ் தேசிய கூட்டமைப்பு? பெரும் நெருக்கடியில் தமிழர் நிலை

கிழக்கு விடயத்தில் மைத்திரியிடம் தோற்றதா தமிழ் தேசிய கூட்டமைப்பு? பெரும் நெருக்கடியில் தமிழர் நிலை

புலம்பெயர்ந்த தமிழர்களின் செய்திகளின் கருத்துக்கள்: தமிழ் வின்னால் வெளியிடப்பட்ட கட்டுரை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ் வின்னின் பெரும்பாலான கருத்தை நாங்கள் ஏற்றுக்கொள்வதில்லை. ஆனால் இக்கட்டுரையின் ஆசிரியரால் எழுதப்பட்ட சில உண்மைகளை நாம் பாராட்ட வேண்டும்.

தமிழர்களை நடுக்கடலில் யோசனை இல்லாது TNA தள்ளிவிட முயற்சிக்கிறார்கள், ஆனால் அடுத்த தேர்தலில் TNA தோற்கடித்தால் எமக்கு நடக்கும் சேதத்தை குறைக்க முடியும்

Link: https://www.tamilwin.com/special/01/203872?ref=home-feed

இலங்கை அரசியலில் ஈழத் தமிழர்களின் எதிர்காலம் நட்டாற்றில் விடப்பட்ட நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது என்னும் வரலாற்று உண்மையை உணர்ந்து கொள்ளும் காலம் நெருங்கியிருக்கிறது

ஜனநாயகத்தையும், அதன் உண்மையான தன்மையையும், தங்களை அழித்தவர்களை வாக்குகளின் மூலமாகவேனும் பழிதீர்க்க வேண்டும் என்னும் எண்ணத்தில் கொண்டுவரப்பட்டது தான் மைத்திரி ரணில் அரசாங்கம். அந்த அரசாங்கத்தின் மீது தமிழ் மக்கள் நம்பிக்கை கொண்டார்கள் என்பதை விட மகிந்த ராஜபக்ச மீதான எதிர்ப்பும், வெறுப்பும் இவர்களை பதவிக்குக் கொண்டுவர உறுதுணையாக இருந்தது

ஆனால், தங்கள் மைய அரசியல் நீரோட்டத்தில் வரலாற்று துரோகத்தனங்களை மீண்டும் செய்து கொள்ளத் தொடங்கியிருக்கிறார்கள். குறிப்பாக தங்கள் அதிகாரத்தை தக்க வைத்துக்கொள்ள தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடையத்தில் பின்தள்ளி ஒதுங்கிக் கொள்ளும் நிலையை மீண்டும் கையிலெடுத்திருக்கிறார்கள் அதிகாரத் தரப்பினர்

மைத்திரி ரணில் அரசாங்கத்தோடு, மிக நெருங்கிய மென்வலு அரசியலைச் செய்துகொண்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு, இன்று வரை ஜனநாயகத்தையும், அரசியலமைப்பையும் காப்பாற்றிவிட்டதாக மார்தட்டிக் கொண்டிருக்கிறது

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மீறப்பட்ட ஜனநாயகத்தையும், அரசமைப்பினையும், காப்பாற்ற உச்ச நீதிமன்றம் ஏறி, வாதாடி, ரணில் விக்ரமசிங்க இழந்த பதவியைப் பெற்றுக் கொடுத்திருக்கிறது சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசிய கூட்டமைப்பு

குறிப்பாக தென்னிலங்கையின் மற்றைய கட்சிகள் மற்றும் ரணில் விக்ரமசிங்கவின் கட்சி உறுப்பினர்கள் கொள்ளாத அக்கறையையினையும், சிரத்தையையும் தமிழ் தேசிய கூட்டமைப்பும், அக்கட்சியின் ஊடகப் பேச்சாளருமான சுமந்திரன் மேற்கொண்ட முயற்சிகளை தென்னிலங்கை ரணில் ஆதரவாளர்கள் மெச்சிக் கொண்டிருக்கிறார்கள்

ரணிலுக்கும், அக்கட்சிக்கும் ஆதரவு கொடுத்துக் காப்பாற்றிய சுமந்திரனை “ரணிலின் ஆஸ்தான மீட்பர்” என்று குறிப்பிட்டிருக்கிறார் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்க. உண்மையில் சுமந்திரனின் சட்ட மதிநுட்பங்கள் மீது சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. அவரின் வழக்காடும் திறனை தென்னிலங்கைத் தரப்பினர் அவதானமாக கவனத்திக் கொண்டிருக்கிறார்கள்

ஆனால், அந்த மதிநுட்பங்களை தமிழ் மக்களின் அரசியல் இருப்பிற்காகவும், அவர்களின் எதிர்கால இலக்கிற்காகவும் பயன்படுத்துவதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பின்னடிக்கிறதோ என்னும் சந்தேகத்தை தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது

அண்மையில் கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக M. L. A. M. ஹிஸ்புல்லாஹ்வை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்திருக்கிறார். இந்த நியமனமானது தமிழ் மக்களுக்கு அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது

கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக முஸ்லிம் நபர் ஒருவர் நியமிக்கப்பட்டதில் பெரும் சந்தேகம் கொள்ள வேண்டிய தேவையில்லை. கிழக்கிலும் வடக்கிலும் அன்பான இஸ்லாமிய சகோதரர்கள் இருக்கிறார்கள். ஆனால் இன்று ஏற்பட்டிருக்கும் அரசியல் குழப்பமான சூழ்நிலையிலும், நாட்டில் இன ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படும் வகையிலுமான நியமனம் இது என்று ஆதங்கம் கொள்கிறார்கள் சமூகச் செயற்பாட்டாளர்கள்

குறிப்பாக வடக்கு கிழக்கு இணைக்கப்பட்டால் இரத்த ஆறு ஓடும் என்று மிக வெளிப்படையாக இனத்துவேசமான கருத்தினை வெளிப்படுத்தியிருந்தவர் M. L. A. M. ஹிஸ்புல்லாஹ். தமிழ் மக்களின் தாயகமான வடக்கு கிழக்கினை இணையவிடாது. நிரந்தரமாக பிரிக்கும் சூழ்ச்சியான இனவாதக் கருத்தினை வெளிப்படுத்திய ஒருவரை ஜனாதிபதி மைத்திரி நியமித்திருக்கிறார்

மைத்திரிபால சிறிசேனவின் கோபத்தின் வெளிப்பாடு தான் இதுவா என்றும் சந்தேகம் கொள்பவர்களும் உண்டு. இதற்கிடையில் தனக்கு கிழக்கு மாகாண ஆளுநர் பதவி வேண்டும் என்று M. L. A. M. ஹிஸ்புல்லாஹ் கேட்டுப் பெற்றுக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன

இன்னமும் அரசியலமைப்பு மற்றும், அரசியல் தீர்வு விடையம் முற்றுப் பெறாமல், தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருக்கும் இந்தச் சூழலில், இருப்பதையும் இழக்கும் நிலையை அரசாங்கம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது

ஆனால், இன்று வடக்கினை மையமாகக் கொண்டு அரசியல் காய்களை மட்டுமே தமிழ் தேசிய கூட்டமைப்பு நகர்த்திக் கொண்டிருக்கிறதோ என்னும் சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. விடுதலைப் புலிகள் தங்களின் காலத்தில் வடக்கு கிழக்கினை அதன் பாரம்பரிய வழித்தடத்தோடு கையாண்டார்கள்

இருமாகாணங்களும் தமிழ் மக்களின் இதயபூமி என்பதை புலிகளின் எந்த இடத்திலும் விட்டுக்கொடுத்தில்லை. அந்தந்த மாகாணங்களின் அதன் தனித்துவத்தோடு இயங்கிக் கொண்டிருந்தது. ஆனால், கூட்டமைப்பினர் வடக்கினை மட்டும் மையமாகக் கொண்டு தங்களின் அரசியல் காய்நகர்த்தல்களை செய்து கொண்டிருக்கிறார்கள்

ஹிஸ்புல்லாஹ் ஆளுநராக நியமிக்கப்பட்டதன் பின்புலம் அல்லது, அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை ஜனாதிபதியிடம் இப்போது வரை கூட்டமைப்பு தெரிவிக்கவில்லை. இங்கே முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்பதல்ல பிரச்சினை. வெளிப்படையாக இனவாதக் கருத்தினை வெளிப்படுத்திய ஒருவரை நியமித்தன் மூலமாக நிரந்தரமாக கிழக்கு மாகாணத்தில் பிரிவினைகளும், பிரச்சினைகளும் ஏற்படும் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை

இதேவேளை, ரணில் விக்ரமசிங்கவுடனும், மைத்திரியுடனும் நெருங்கி மென்வலு அரசியலைப் பேசும் கூட்டமைப்பு இந்த நியமிப்புக் குறித்து பேசியிருப்பார்களாயின் கிழக்கின் அரசியல் மீது அக்கறை கொண்டவர்கள் என்பதை ஏற்றுக் கொண்டிருக்க முடியும்

ஏற்கனவே கிழக்கின் பல பகுதிகளையும் தமிழ் மக்கள் இழந்துவிட்டார்கள். இந்நிலையில், கூட்டமைப்பு அமைதி காத்துக் கொண்டிருக்கிறது. ரணில் விக்ரமசிங்கவின் பிரதமர் பதவியைக் காப்பாற்றுவதில் கூட்டமைப்பு கண்ட முனைப்பும் வெற்றியும், ஆளுநர் நியமிப்பில் எந்தவிதமான அக்கறையையும் காட்டவில்லை

ஆளுநர்களை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உண்டு. அதனை தடுக்க முடியாது. ஆனால் இந்த நியமனம் தொடர்பில் ஏதேனும் ஒரு சிறு முயற்சியையாவது கூட்டமைப்பினர் எடுத்திருக்க வேண்டும் என்பதே தமிழ் மக்களின் ஆதங்கம்

நீண்ட பெரும் அரசியல் வரலாற்றைக் கொண்ட ஈழத் தமிழ் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக தங்கள் இருப்பையும் அதன் அடையாளங்களையும் இழந்து கொண்டிருக்கிறார்கள். அதனை தடுப்பதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. அல்லது ஜனாதிபதியின் அரசியல் காய் நகர்த்தல்களில் சிக்கிக் கொண்டு மௌனம் காத்துக் கொண்டிருக்கிறதா? என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

About Tamil Diaspora News.com 432 Articles
ஈழத்தமிழருக்கான ஆதரவுக்குரலாகவும், உலகமெல்லாம் பரவிவாழும் தமிழ் மக்களின் சார்பில் இந்த இணையம் செயற்படுகின்றது. எமது இன் விடுதலையை வென்றெடுக்க அனைவரும் ஒன்றிணையவேண்டி கட்டாயத்தின் பேரில் எமது செய்திகளும் அறிக்கைகளும் அமைந்திருக்கும்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.