ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளை தீர்க்க அமெரிக்க தலையிட வேண்டுமென வலியுறுத்தி ஆலய வழிபாடு, கையெழுத்து போராட்டம் இன்று (1) யாழில் நடைபெற்றது .
வலிந்தும் சரண்டைந்தும் காணாமலாக்கப்பட்ட உறவினர்களின் வவுனியா மாவட்ட சங்கத்தினர் வடக்குகிழக்கு ரீதியாக மூன்று இலட்சம் கையெழுத்துக்களைப் பெறும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த சில நாட்களில் முப்பதாயிரம் கையெழுத்துக்களைப் பெற்றுள்ள நிலையில், தொடர்ந்தும் கையெழுத்து வேட்டை இடம்பெறுகிறது. இதற்காக இன்று யாழ்ப்பாணம் வந்த சங்கத்தினர், யாழ் கோட்டை முனியப்பர் ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து தந்தை செல்வா சமாதியிலும் வணக்கம் செலுத்தி வழிபட்டனர். இதன்போது தந்தைசெல்வா கூறியதைப்போல, தமிழனை கடவுள்தான் காப்பாற்ற வேண்டுமென்ற நிலையிலே தமிழ் மக்கள் நிற்பதாகவும், தந்தை செல்வாவை பின்பற்றுவதாக கூறும் அவரது கட்சியினரே மக்களின் எதிர்பார்ப்புக்களிற்கு மாறாக செயல்படுவதாகவும் தெரிவித்தனர்.
“அமெரிக்க ஜனாதிபதி தலையிட வேண்டுமென்ற எங்கள் கோரிக்கையை உங்கள் முன்னால் வலியுறுத்துகிறோம். அதனை அடைவதற்கு சத்தியம் செய்கிறோம்“ என நினைவிடத்தில் சத்தியம் செய்தனர்.
இதன் போது அந்த சங்கத்தின் செயலாளர் ராஜ்குமார் கருத்து வெளியிடுகையில்-
அமெரிக்காவின் உதவி கேட்டு நடத்தப்படும் கையெழுத்து வேட்டையில், இரண்டாவது தடவையாக யாழ்ப்பாணத்திற்கு வந்திருக்கின்றோம்.
தமிழர்களின் கலாச்சாரம், தமிழர்கள் வாழும் நிலங்கள், தமிழர்களின் சனத்தொகை எல்லாம் முடிவுக்கு வரமுன், அனைவரும் நம்புகிறோம், விரும்புகிறோம் அமெரிக்க இங்கு விரைவில் வருவார்கள் என்று.
இந்த இடம் தமிழ் ஈழத்தின் காந்தி, தந்தை செல்வா இயற்கையுடன் சங்கமமான இடம். ஒவ்வொரு சுதந்திரம் விரும்பும் தமிழர்களுக்கும் இது ஒரு சிறப்பான இடமாகும்.
1950 களில் இருந்து அவர் கூட்டாட்சியை கேட்டார், அவரது போராட்டத்தில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் கூட்டாட்சி மீதும் சிங்களத் தலைவர்கள் மீதும் நம்பிக்கையை இழந்தார்.
முடிவில் ஸ்ரீலங்காவில் இருந்து சுதந்திரம் பெற வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார்.
மூன்று தமிழ் தலைவர்கள் தந்தை செல்வா, ஜி.ஜி.பொன்னம்பலம், திருச்செல்வம் ஆகிய அனைவரும் அதே கொள்கையுடன் இணைந்தார்கள் .
தந்தை செல்வாவின் கடைசி வார்த்தை, நாம் இன்னும் இங்கு அவரது அசரீரியை கேட்க கூடியதாவுள்ளது. அது- “கடவுள் தான் தமிழர்களை காப்பாற்ற வேண்டும்.:
தந்தை செல்வா இன்று இங்கே நாம்சொல்வதை தயவுசெய்து கேளுங்கள்:
உங்கள் தமிழ் அரசு கட்சி தற்போது ஏக்கியா ராஜ்ஜிய கட்சியாக மாறியது. நீங்கள் தொடங்கி வைத்த கட்சியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பணக்காரர்களாகி, இரண்டு வீடுகளுக்கு மேல் வைத்திருக்கிறார்கள். சிலர் அரண்மனைகளைக் கொண்டுள்ளனர். நீங்கள் தொடங்கி வைத்த கட்சி விடுதலைப் போராட்டத்தை கைவிட்டுவிட்டது, மாறாக எதிர்க்கட்சி தலைமை உட்பட சலுகைகளுக்குதான் போராடி கொண்டிருக்கிறது.
நாம் இங்கே இந்த கையெழுத்து வடிவத்தை உங்கள் சமாதி முன்வைத்து, எங்கள் பணிக்காக தந்தை செல்வாவே உங்கள் ஆசீர்வாதம் வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.
இறுதியாக, யூதர்கள் ஒருபோதும் ஒரு ஐக்கியப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் தங்களுக்குள் அடிபட்டு கொள்பவர்கள், மாறாக தங்களுக்கு சொந்த நாடு வேண்டும் என்ற கொள்கையின் கீழ் ஐக்கியப்பட்டு ஓர் தலைமையில் தங்களுக்கான தனிநாட்டை போராடி எடுத்தவர்கள். இதனை எம் தமிழ் உறவுகளுக்கு நினைவூட்ட விரும்புகிறோம்.
எமக்கு தெரியும், தமிழர்கள் ஐக்கியப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனால் குறைந்த பட்சம் நமது இலக்கு மற்றும் கொள்கையின் கீழ் யூதர்கள் போல் ஐக்கியப்பட்டு ஓர் புதிய தலைமையின் கீழ் “எமது இலக்கை அடைவோம் என இன்று இங்கு சத்தியம் எடுப்போமாக“ என்றார்.
Be the first to comment